இலங்கை தமிழர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்கிறார் அண்ணாமலை!
01 May,2022
இலங்கை தமிழரின் அழைப்பை ஏற்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றுள்ளார். அங்கு தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெறும் மே தின விழாவில் பங்கேற்கிறார். அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நாட்டுக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதுமட்டுமின்றி, இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வீடு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு நன்றி கூறும் விதமாக,தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் மே 1-ம் தேதி (இன்று) நடத்தப்படும் மே தின விழாவில் பங்கேற்குமாறு இந்தியப் பிரதமர் மோடியின் பிரதிநிதியாக தமிழகபாஜக தலைவர் அண்ணாமலைக்கு இலங்கை தமிழர்கள் அழைப்பு விடுத்தனர்.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அண்ணாமலை 29-ம் தேதி நள்ளிரவு 12.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இலங்கை சென்றடைந்தார்.
இலங்கையில் இன்று நடைபெறும் தேயிலை தொழிலாளர்களின் மாநாட்டில் அவர் பங்கேற்று உரையாற்ற உள்ளார். அதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் சென்று வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தியா சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளை பார்வையிடுகிறார். அங்குள்ள தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொள்கிறார்.
தொடர்ந்து, தமிழர் வாழும் பகுதிகளுக்கு சென்று தமிழ் மக்களின் கோரிக்கை, குறைகளை கேட்டறிய உள்ளார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, வரும் 4-ம் தேதி இலங்கையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.