தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டன. தொற்று பாதிப்பு 20-க்குள் இருந்தது. ஒரு மாதமாக கொரோனா உயிரிழப்பு இல்லாத மாநிலமாக திகழ்ந்தது.
இதனால் பொது சுகாதாரத்துறையின் மூலம் விதிக்கப்பட்ட அபராதம் விலக்கி கொள்ளப்பட்டது. முக கவசம் அணியாமல் இருந்தால் ரூ.100 முதல் ரூ. 500 வரை அபராதம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 மாதமாக அபராத நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக பொதுமக்கள் முக கவசம் அணிவதை மறந்து சுற்றத் தொடங்கினார்கள். பஸ், ரெயில் பொது போக்குவரத்தின் போதும், பொது இடங்களிலும் முக கவசம் அணியாமல் நடமாடினார்கள்.
அரசு, முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
ஆனால் அதனை மக்கள் பொருட்படுத்தாமல் முக கவசம் இன்றி வெளியில் சென்று வருகிறார்கள். அரசியல் கூட்டங்கள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள், இறப்பு நிகழ்ச்சியிலும் மக்கள் முக கவசம் அணிவதில்லை.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று 2 நாட்களாக அதிகரிக்க தொடங்கியது. சென்னை ஐ.ஐ.டி.யில் 30 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் சுகாதாரத்துறையின் பரிசோதனை, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவ கல்லூரி மாணவர்கள், ஊழியர்கள், டாக்டர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இரட்டை முக கவசம் அணிவது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வந்தால் கூட அவர்களுக்கு அங்கு இலவசமாக முக கவசம் வழங்குவதற்கு மையம் ஒன்றும் தொடங்கப்பட்டது. அதனையும் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை ஐ.ஐ.டி.யில் 800 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்குள்ள 19 விடுதிகளில் தேவையான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளருடன் தொடர்பு கொண்டு வருகிறேன். தற்போது வரை கவலையோ, பதட்டமோ படவேண்டிய நேரமில்லை என்று அவர் கூறினார்.
ஐ.ஐ.டி. வளாகத்தில் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகள், பிற ஊழியர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். விடுதியின் 3 அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். தேவைப்பட்டால் கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி வளாகத்தில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள நுழைவு வாசலில் முக கவசம் அணிந்து சென்றால் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி. மட்டுமின்றி தமிழகத்தின் எல்லா பகுதியிலும் மக்கள் தயவு செய்து முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மீண்டும் ஒரு சவாலான சூழ்நிலையை உருவாக்க வேண்டாம்.
முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மீண்டும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளோம். பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 வசூலிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சி அலுவலர்கள் மீண்டும் இதனை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நல்ல கட்டுப்பாடு உள்ளது. இந்நோய் ஒரு மாநிலத்தில் மட்டும் ஒழிக்கப்பட்ட நோயல்ல. பொது இடங்களில் முக கவசம் அணிவதை நிறுத்தி விட்டோம். காலம் தாழ்த்தாமல் தடுப்பூசியை உடனே போட்டுக் கொள்ள வேண்டும். காய்ச்சல், தொண்டை கரகரப்பு இருந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் 1.16 லட்சம் கொரோனா நோயாளிக்கான படுக்கைகள் தயாராக உள்ளன. இன்று வரை 18 பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர். விடுமுறை நாட்களில் மக்கள் வெளியே செல்லும் போது கூட்டம் மிகுந்த பகுதிகளில் தவறாமல் முக கவசம் அணிய வேண்டும்.
ஐ.ஐ.டி. பாதிப்பு ஒரு நிகழ்வாக கருதாமல் அதில் இருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும். தங்கும் விடுதிகளில் உள்ளவர்கள் கூட்டமாக அமர்ந்து உணவு அருந்துவதை தவிர்க்க வேண்டும். பரிசோதனைகள் தற்போது 20 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அவற்றை 25 ஆயிரமாக உயர்த்துவோம்.
எனவே தடுப்பூசி போடாதவர்கள் உடனே போட்டு கொள்வதோடு முக கவசம் அணிந்து பாதுகாப்பாக வெளியில் சென்று வரவேண்டும்.
ஒரு நல்ல செய்தி என்னவென்றால் இதுவரையில் 4 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டு வந்த நிலையில் நேற்று ஒரு லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.