கொரோனா மரணங்களை மறைக்கிறதா மத்திய அரசு?
17 Apr,2022
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு 40 லட்சம் பேர் இறந்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய சுகாதார அமைச்சகம், 'இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த, வெவ்வேறு புவியியல் அமைப்பு கொண்ட ஒரு நாட்டில், சிறிய நாடுகளில் பயன்படுத்தும் கணிதவியல் முறையில் கொரோனா மரணங்களை கணக்கிட முடியாது' என கூறியுள்ளது.அமெரிக்காவில் வெளியாகும் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் நேற்று (ஏப்.,16) உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட கட்டுரையில், 'இந்தியாவில் கொரோனா இறப்புகளை கணக்கீடு செய்வதில் சிக்கல்கள் உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் முயற்சியை இந்திய தடுக்கிறது. தரவுகளை வெளியிட இந்தியா ஆட்சேபனை தெரிவித்து வருகிறது' எனக் குற்றம் சாட்டியிருந்தது. மேலும், இந்தியாவில் 5 லட்சம் இறப்புகளை மட்டுமே மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், 40 லட்சம் வரை கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருந்தது.உலக சுகாதார அமைப்பின் இந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சில நாடுகள் தரும் கொரோனா இறப்பு விவரங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் உலக சுகாதார அமைப்பு, இந்தியா போன்ற சில நாடுகளில் ஏற்பட்ட மரணங்களை கணிதவியல் கோட்பாடுகள் அடிப்படையில் அளிக்க கூறுகிறது.
இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த, வெவ்வேறு புவியியல் அமைப்பு கொண்ட ஒரு நாட்டில், சிறிய நாடுகளில் பயன்படுத்தும் கணிதவியல் முறையில் கொரோனா மரணங்களை கணக்கிட முடியாது.எனவே, உலக சுகாதார அமைப்பின் இறப்பு கணிப்பு முறை இந்தியாவிற்கு பொருந்தாது. 18 மாநிலங்களில் இருந்து சரிபார்க்கப்படாத தரவுகளை உலக சுகாதார அமைப்பு பெற்றுள்ளது. தவறான தரவுகளால் இறப்பு விகிதத்தில் வேறுபாடு ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் இறப்பு கணிப்பு முறை சரியானது அல்ல. அதேபோல், அவ்வமைப்பின் கணிப்பு உண்மை என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.