இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், உலகிலேயே மிகக் குறைந்த அளவாக வெனிசுலாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 2 ரூபாய்க்கும் குறைவாகவே விற்கப்படுகிறது. நாம் கனவில் கூட நினைக்க முடியாத விலையில் பெட்ரோல் கிடைப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வோம்.
இந்தியாவில் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி நாட்கள் பல ஓடி விட்டன. தினமும் சுமார் 80 காசுகள் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், அந்த 80 காசில் அரை லிட்டர் பெட்ரோல் வாங்கக் கூடிய நாடு இருக்கிறது என்றால் நம்ப முடியுமா. ஆனால் அப்படி சில நாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. வெனிசுலா, ஈரான், லிபியாவில் தண்ணீரை விட பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே இருக்கிறது.
உலகிலேயே மிகக் குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கும் நாடாக லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலா உள்ளது. இந்த நாட்டில் பெட்ரோல் விலை இந்திய ரூபாயில் ஒரு ரூபாய் 93 காசு தான்.
மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ளதால் உலகின் முன்னணி கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளர்களில் ஒருவராக வெனிசுலா உள்ளது. அந்நாட்டில், மரக்காய்போ பேசின், பாரினாஸ்-அப் யூரே பேசின், ஃபால்கான் பேசின், ஓரினோகோ ஆயில் சாண்ட் பெல்ட் என ஐந்து இடங்களில் மிகப்பெரிய அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. உலக நாடுகளில் கையிருப்பில் உள்ள 1,200 பில்லியன் பேரல் அளவுக்கு இணையாக ஓரினோகோ ஆயில் சாண்ட் பெல்ட் பகுதியில் கச்சா எண்ணெய் படிமங்கள் உள்ளன.
300 பில்லியனுக்கும் அதிகமான பீப்பாய்கள் கையிருப்பில் கொண்டு உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் இருப்பு உள்ள நாடாக இருக்கிறது வெனிசுலா. 1976 ஆம் ஆண்டில், வெளிநாட்டு செல்வாக்கைத் தடுக்கும் விதமாக வெனிசுலாவின் எண்ணெய்த் தொழில் தேசியமயமாக்கப்பட்டது. சுமார் 2.90 கோடி மக்கள் தொகை கொண்ட வெனிசுவலாவில் 7 பேரில் ஒருவர் கார் பயன்படுத்தி வருகின்றனர்.
''10 வயது சிறுமிகளை பலாத்காரம் செய்கிறார்கள்'' : ரஷ்ய வீரர்கள் மீது உக்ரைன் குற்றச்சாட்டு
லிபியாவில் பெட்ரோல் விலை லிட்டர் 2.48 ரூபாய்க்கும், ஈரானில் பெட்ரோல் விலை லிட்டர் 3.95 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. இதனால், வெனிசுலா, லிபியா, ஈரான் நாடுகளில் மக்கள் எரிபொருளுக்கு சொற்ப அளவிலான தொகையேயே செலவிடுகிறார்கள். லிபியாவை பொருத்தவரை ஆயிரம் நபர்களில் 983 பேர் கார் பயன்படுத்தி வருகின்றனர். மலேசியா, ரஷ்யா, சவுதி அரேபியா உட்பட 23 நாடுகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 ரூபாய்க்கு குறைவாகவே உள்ளது.
பொதுவாக நார்வே, ஹாங்காங் போன்ற பணக்கார நாடுகளில் எரிபொருள் விலை அதிகமாகவும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் எரிபொருள் விலை குறைவாகவும் இருப்பது வழக்கம். அனைத்து நாடுகளும் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்களை ஒரே விலையில் கொள்முதல் செய்தாலும், அதற்கு வெவ்வேறு வரிகளை விதிப்பதால் உள்ளூரில் பெட்ரோல், டீசல் விலையேற்றத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யும் முக்கிய நாடாக உள்ள நிலையில், மத்திய, மாநில அரசின் அதிக வரி விதிப்பே பெட்ரோல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.