சென்னை திருவான்மியூரில் ‘இம்ப்காப்ஸ்’ நிறுவனத்தின் பவள விழாவில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா நேரத்தில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள், குறிப்பாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், எம்.ஆர்.பி.யில் இருந்து பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இதில் எம்.ஆர்.பி.யில் இருந்து பணி நியமனம் செய்யப்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட இருக்கிறது. 800 பேருக்கு வாய்ப்புகள் வழங்க முடியவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசுடன் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். மத்திய அரசின் தேசிய நலக்குழும திட்டங்களில் அவர்களை இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே யாரையும் நாங்கள் கைவிடப்போவதில்லை.
காலி பணியிடங்களில் முன்னுரிமை
தற்போது சங்கடத்தில் உள்ள செவிலியர்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் சில சக்திகள் ஈடுபட செய்கிறார்கள். செவிலியர்களும் இருக்கும் சூழலை உணரவேண்டும். யாரையும் பாதிப்படைய செய்வது அரசின் நோக்கம் அல்ல. பக்கத்து மாநிலங்களில் பேரிடர் காலத்தில் பணியாற்றியவர்களை ஒரே அரசாணை மூலம் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் 3 மாதம் அவர்களது பணிக்காலத்தை நீட்டிப்பு செய்ததுடன், இன்னும் அவர்களுக்கு ஏதாவது பலன் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அதனால்தான் 7,448 பேரை புதிதாக வேலைக்கு எடுத்ததில் அந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். பேரிடர் காலத்தில்பணியாற்றியவர்களுக்கு அடையாள சான்று தரப்பட உள்ளது. எதிர்காலத்தில் இத்துறையில் காலியாகும் பணியிடங்களில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இன்று இல்லாவிட்டாலும் நிச்சயமாக அவர்களுக்கு அரசு பணியில் வாய்ப்பு வழங்கப்படும்.
அபராதம் இனி இல்லை
மினி கிளினிக்கை பொறுத்தவரை ஓராண்டு பணிதான், அதுவும் தற்காலிகமானது என்று முந்தைய அரசு தெளிவாக அறிவித்தும், பணி நிரந்தரம் கோரமாட்டோம் என்று உறுதியளித்த பின்னரும்தான் இந்த வேலைக்கு பணியாளர்கள் சேர்ந்திருக்கிறார்கள். ஏற்கனவே மனிதாபிமான அடிப்படையில்தான் மினி கிளினிக் பணியாளர்களுக்கு 3 மாதம் பணிக்காலத்தை நீடித்தோம். இனி நிர்வாகத்தை முறைப்படுத்துதல் அவசியம்.
கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் முக கவசம் அணியாமல் இருந்தால் அபராத நடவடிக்கை தொடருமா? என்று கேட்கிறார்கள். இனி அந்த நிலை இல்லை. ஆனாலும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, சானிடைசர் பயன்படுத்துவது என்பது விதிமுறைகள். இவைகளை கடைபிடித்தால் பாதுகாப்பு. உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை நாம் புறந்தள்ளிவிட முடியாது. அதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இன்னும் 2 மாதம்
மார்ச் 31-ந் தேதிக்கு பிறகு அந்தந்த மாநிலங்களில் நிலவும் சூழலுக்கு ஏற்ப கொரோனா விதிமுறைகளில் உரிய முடிவுகளை மாநில அரசுகள் எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. மராட்டியம், டெல்லி, அரியானாவில் மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை என்று அந்தந்த மாநில அரசுகள் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் முக கவசம் அணிய சொல்வதின் அவசியம் ஏன் என்றால், மறுபடியும் ஒரு அவஸ்தையை மக்கள் அனுபவித்திட கூடாது என்பதற்காகத்தான்.
ஜப்பானில் பல ஆண்டுகளாகவே முக கவசம் அணிவதை வாடிக்கையாகவே கொண்டிருக்கிறார்கள். எனவே நாம் இன்னும் 2 மாதம் முக கவசம் அணிவதில் சிரமம் இல்லையே.
இவ்வாறு அவர் கூறினார்.