`கோடைகாலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு வருமோ?' என்ற அச்சத்தில் சென்னை மாநகர மக்கள் நாட்களைக் கடத்தி வருகின்றனர். 'ஒவ்வோர் ஆண்டும் பெய்யக்கூடிய மழையில் 95 சதவீத நீர் கடலை நோக்கித்தான் செல்கிறது. மழை நீர் சேமிப்பு தொடர்பான எந்தக் கணக்குகளும் அரசிடம் இருப்பதில்லை. அதனால்தான் மிகையான மழை இருந்தும் தண்ணீர் தட்டுப்பாட்டைப் பற்றிப் பேசுகிறோம்' என்கின்றனர் நீரியல் நிபுணர்கள். கோடைகாலத்தை சமாளிக்கும் அளவுக்கு சென்னை குடிநீர் வாரியத்தில் தண்ணீர் உள்ளதா?
"தினமும் 3 குடம் தண்ணீர்தான்"
சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 1 கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக பூண்டி, சோழவரம், புழலேரி, கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகியவை உள்ளன. இதுதவிர, கிருஷ்ணா நதிநீர், கிணறுகள், நிலத்தடி நீர் ஆகியவற்றில் இருந்தும் ஓரளவு தண்ணீர் கிடைக்கிறது. இதுதவிர, மீஞ்சூர், நெம்மேலி ஆகிய பகுதிகளில் அரசால் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் இருந்தும் மாநகர மக்களுக்கு கிடைக்கிறது.
"சென்னையைப் பொறுத்தவரையில் தனி நபருக்கு நாளொன்றுக்கு 120 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், அதற்கேற்ப விநியோகம் நடப்பதில்லை'' என்கிறார், சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அன்பு. இங்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் 15,000 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்குத் தேவையான தண்ணீரை காலையில் மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் திறந்துவிடுகின்றனர். அதுவும் போதிய அளவு கிடைக்காததால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
``அரசு கட்டிக் கொடுத்த வீடாக இருந்தாலும் எங்க மக்களுக்குத் தேவையான குடிநீர் கிடைக்கறதில்லை. காலையில 8 மணியளவுல கால்மணி நேரம்தான் தண்ணி வருது. இதை வச்சு பாத்ரூம் தேவைக்குக்கூட பயன்படுத்த முடியல. எங்களுக்கு வெஸ்டர்ன் டாய்லெட்டை கட்டிக் கொடுத்திருக்காங்க. இதுமாதிரியான கழிவறையைப் பயன்படுத்த ஒரு நபருக்கு ஒரு குடம் தண்ணி தேவைப்படும். கால்மணி நேரம் தண்ணீர் வர்றதால துணி துவைக்கறது உள்பட வேறு எந்த தேவைக்கும் தண்ணீர் போதவில்லை. கோடைக் காலத்தில் தண்ணீர் இல்லாம வாழ முடியாது. நாங்க எவ்வளவு கஷ்டப்படறோம்னு யாருக்கும் தெரியாது. தினமும் காலைல ஒரு மணிநேரம் சாயந்தரம் ஒரு மணிநேரம்னு அதிகாரிகள் தண்ணீரை திறந்துவிட்டாலே போதும்'' என்கிறார்.
``எங்களுக்கு தினமும் 3 குடம் தண்ணிதான் வருது. பக்கத்து பகுதிகள்ல போய்த்தான் குடத்துல தண்ணி கொண்டு வரவேண்டியிருக்கு. இதைப் பத்தி அதிகாரிகள்கிட்ட சொன்னாலும் பதில் இல்லை. ஐந்து பேர் இருக்கற வீட்டில் 3 குடம் தண்ணிய வச்சு என்ன பண்றது. இப்ப வெயில் காலம் ஆரம்பிச்சிருச்சு. லிப்ட்ல இல்லாம படிக்கட்டுலதான் தண்ணியை தூக்கிட்டு போறோம். எங்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கறதுக்கு அரசாங்கம் உதவி செய்யணும்'' என்கிறார், புளியந்தோப்பு
சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் தினசரி ஐநூறுக்கும் மேற்பட்ட லாரிகளில் எளிய, நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடக்கிறது. ஒரு தெருவுக்கு ஆறாயிரம் லிட்டர் என்ற கணக்கின்படி நீர் விநியோகம் நடந்தாலும் இதர தேவைகளுக்கு நீர் கிடைப்பது சிரமமாக உள்ளது என்கின்றனர், வில்லிவாக்கம், திருவேங்கடய்யா தெருவைச் சேர்ந்த பொதுமக்கள்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள் பிபிசி தமிழிடம் பேசுகையில், ``ஒருநாள்விட்டு ஒருநாள் மெட்ரோ தண்ணி லாரி வரும். தெருவுல இருக்கற குழாய்லயும் மெட்ரோ தண்ணி வரும். ஆனா, காலையில 10 மணிக்கு மேல சாக்கடை கால்வாய் தண்ணி சேர்ந்து வர்ற மாதிரி வாசனை வரும். அதை சமையலுக்கு பயன்படுத்த முடியாது. லாரி தண்ணி வந்தால் பிடிச்சுக்குவோம். இங்க கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வியாபாரத்துக்குப் போறவங்க நிறைய பேர் இருக்காங்க. லாரி தண்ணி வர்ற நேரத்துக்கு அவங்களால தண்ணி பிடிக்க முடியாது. எங்க பகுதிக்கு ஒரு தண்ணி தொட்டி இருப்பதால போதுமான குடிநீர் கிடைக்கறதில்லை. தெருக்குழாயும் ரிப்பேராகிவிட்டது. அதை சரிசெய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்'' என்கிறார்.
கோவிந்தம்மாள் சொல்வதைப் போல, வாரத்துக்கு மூன்று நாள்கள் மெட்ரோ லாரி நீர் வந்தாலும் ஒரு குடும்பத்துக்கு 20 அல்லது 30 குடம் வரையில் தண்ணீர் பிடித்துக் கொள்கின்றனர். இதை வைத்துக் கொண்டு வீட்டுத் தேவையை நிறைவு செய்வதில் சிக்கல் இருப்பதையும் நேரடியாக பார்க்க முடிந்தது.
இதையடுத்து, சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்குச் சென்றோம். ``கடந்த வடகிழக்குப் பருவமழையால் போதிய அளவு நீர் வரத்து இருந்ததால் இந்தக் கோடையை சமாளிப்பதில் சிரமம் இருக்காது'' என அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது செம்பரம்பாக்கத்தில் உள்ள நீரின் அளவு என்பது 2,859 மில்லியன் கனஅடியாக உள்ளது. அதேநேரம், பூண்டி ஏரியில் நீர் இருப்பு என்பது 2011 மில்லியன் கனஅடியாகவும் சோழவரத்தில் 627 மில்லியன் கனஅடியாகவும் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் 500 மில்லியன் கனஅடியாகவும் புழல் ஏரியில் 2,924 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது.
மேலும், வீராணத்தில் 474 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. இதனை மொத்தமாகக் கணக்கிட்டால் 9,395 மில்லியன் கனஅடி நீர் இருப்பில் உள்ளதாக மெட்ரோ குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு இதே நாளில் 9,468 மில்லியன் கனஅடி நீர் இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இவற்றில் இருந்து சென்னையில் உள்ள தொழிற்சாலைகள், நுகர்வோர்கள், பெரிய நுகர்வோர்கள் என நாளொன்றுக்கு 951 மில்லியன் லிட்டர் நீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போதுள்ள நீர் இருப்பு என்பது ஒன்பது மாதங்களுக்குத் தேவையான அளவுக்கு உள்ளதாகவும் மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர, திருவொற்றியூர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 15 மாநகராட்சிப் பகுதிகளில் 5.57 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் என்பது 3.75 மீட்டருக்கு வந்துவிட்டதாகவும் ஒரு புள்ளிவிவரத்தை மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் அளித்தனர். ஆனால், பூண்டி, சோழவரம், புழலேரி, கண்ணன்கோட்டை, செம்பரம்பாக்கம், வீராணம், தாமரைப்பாக்கம், கொரட்டூர் அணைக்கட்டு, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பெய்த மழை தொடர்பான புள்ளிவிவரங்கள் எதுவும் மெட்ரோ குடிநீர் வாரியத்தில் கிடைக்கப் பெறவில்லை.
தவறான புள்ளிவிவரங்களா?
``சென்னையில் ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். மெட்ரோ குடிநீர் வாரியம் கொடுக்கும் குடிநீர் என்பது போதுமானதாக இல்லை. ஒரு தனி மனிதனுக்கு நாளொன்றுக்கு 100 லிட்டர் நீர் தேவைப்படும். மெட்ரோ குடிநீர் வாரியம் நாளொன்றுக்கு 700 மில்லியன் லிட்டர் நீரை விநியோகித்தாலும் அது மக்களிடம் சென்று சேரும்போது 500 மில்லியன் லிட்டர் என்ற அளவுக்குத்தான் கிடைக்கும். அப்படியானால் தண்ணீருக்காக மக்கள் மாற்று வழிகளைத் தேட வேண்டிய சூழல் நிலவுகிறது. இதைத் தவிர்த்து நிலத்தடி நீர் மட்டுமே முக்கிய ஆதாரமாக உள்ளது'' என்கிறார், நீரியல் நிபுணர் பேராசிரியர் ஜனகராஜன்.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய பேராசிரியர் ஜனகராஜன், ``நிலத்தடி நீர் மட்டம் என்பது சென்னையில் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. அதிகாரிகள் கொடுக்கும் புள்ளிவிவரத்தில், 'நிலத்தடி நீர் என்பது 3 மீட்டரில் உள்ளது' என்கிறார்கள். `மழை பெய்தாலே 2 மீட்டர் நிலத்தடி நீர் மேலே வந்துவிட்டது' என்கிறார்கள். இதுபோன்ற புள்ளிவிவரங்கள் நம்மை தவறாக வழிநடத்தக் கூடியவை. சென்னையின் புவியியல் அமைப்பு என்பது ஒருபக்கம் கடலையொட்டிய பகுதிகளில் நிலத்தடி நீர் கிடைக்கும். அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பூமியின் அடியில் பாறைகள் அதிகம் இருக்கும். இங்கு தண்ணீருக்காக 300 அடி ஆழத்துக்கும் கீழே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
நிலத்தடி நீரில் உப்பு, ரசாயனங்கள்
கடலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் உப்பு நிரம்பிய நிலத்தடி நீர்தான் உள்ளது. உப்பின் அளவு என்பது 1,500 டி.டி.எஸ் வரையில் சென்றுவிட்டது. வடசென்னையில் உள்ள திருவொற்றியூர், மணலி ஆகிய பகுதிகளில் எண்ணெய் கலந்த தண்ணீர் கிடைக்கிறது. அங்கு எண்ணெய் நிறுவனங்கள் நிரம்பியுள்ள பகுதிகளில் 2 மீட்டரில்கூட தண்ணீர் கிடைக்கும். ஆனால், அவை பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசு நிரம்பியதாக இருக்கிறது. மக்களால் அதை வைத்துக் கை கழுவக்கூட முடியாத சூழல் உள்ளது. ஒருபக்கம் உப்பாகவும் மறுபுறம் ரசாயனங்களாலும் நிலத்தடி நீர் மாசடைந்து உள்ளது'' என்கிறார்.
``சென்னையில் ஒருகட்டத்தில் நிலத்தடி நீர் கிடைக்காமல் போகக்கூடிய நிலை வரலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்களே?'' என்றோம். ``ஆமாம். இதனை எப்படி மீட்டெடுக்கப் போகிறோம்? சென்னையில் 1200 முதல் 1,400 மில்லிமீட்டர் வரையில் சராசரியாக மழை பெய்கிறது. ஆனால், பெய்கின்ற மழை நாள்கள் என்பது குறைவு. சென்னையைச் சுற்றிலும் ஏராளமான ஏரிகளும் கோயில் குளங்களும் உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையால் எத்தனை குளங்கள் நிரம்பியுள்ளன என நேரில் சென்று பார்க்கலாம்.
சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது 54 சதுர கிலோமீட்டராக இருந்தது. இன்றைக்கு ஐந்து சதுர கிலோமீட்டராக சுருங்கிவிட்டது. சென்னையின் பாதி குடிநீரை கொடுக்கக்கூடிய அமைப்புள்ள சதுப்பு நிலம் இது. கடலையொட்டியுள்ள சதுப்பு நிலங்களும் போய்விட்டது. ஒருபுறம் இயற்கைக்கு விரோதமான செயல்களை செய்கிறோம், மறுபுறம் தண்ணீர் இல்லை என்கிறோம். இயற்கையையொட்டி வாழப் பழகுங்கள் என்பதுதான் தீர்வாக இருக்க முடியும்'' என்கிறார்.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தேவையா?
``மக்கள் மழை நீரை சேமிக்கப் பழக வேண்டும். ஏரிகள், குளங்களில் நீரை சேமிக்க வேண்டும். வியாசர்பாடி, வில்லிவாக்கம், மடிப்பாக்கம் என முக்கிய ஏரிகள் எல்லாம் அழிந்துவிட்டன. இனியாவது இருக்கின்ற ஏரிகளைப் பாதுகாக்க வேண்டும். வரும் காலங்களில் சென்னையில் கடல்மட்டம் உயரப் போகிறது. சுமார் 3.3 மில்லிமீட்டர் வரையில் உயரலாம் என்கின்றனர். அடுத்த 30 வருடங்களில் சென்னையின் பல பகுதிகள் சென்னைக்கு அடியில் செல்லலாம்'' என எச்சரிக்கிறார், ஜனகராஜன்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்துப் பேசியவர், ``சென்னைக்கு இப்படியொரு திட்டம் தேவையில்லை. 1400 மில்லிமீட்டர் சராசரி மழை பெய்யக்கூடிய ஒரு மாநகரத்துக்கு இந்தத் திட்டம் தேவையா எனப் பார்க்க வேண்டும். கிழக்கு ஆசிய நாடுகளில் 250 மில்லிமீட்டர், 400 மில்லிமீட்டர் என சராசரி மழை பெய்கின்றன. அந்த நாடுகளுக்கு இதுபோன்ற திட்டங்கள் தேவை. நமக்கும் பெய்யக்கூடிய 95 சதவீத மழை நீர் என்பது கடலை நோக்கிச் செல்கிறது. பிறகு எதற்காக மழை பெய்ய வேண்டும்?
சென்னை மக்களால் இந்த கோடைக்காலத்தை ஓரளவுக்குக் கடந்துவிட முடியும். இல்லாவிட்டால் பத்தாயிரம் ட்ரக்குகளில் தண்ணீர் விநியோகம் செய்வார்கள். டிசம்பரில் பெய்த மழையை சேமித்து வைத்திருந்தால் இதுபோன்ற கேள்விகளுக்கே அவசியமில்லாமல் இருந்திருக்கும். குடிமராமத்து என்ற பெயரில் பல நூறு கோடிகள் செலவழிக்கப்பட்டுவிட்டன. ஜப்பானில் பூமிக்கடியில் ஏரியை உருவாக்குகிறார்கள். நாம் பூமிக்கு மேலே உள்ள ஏரியை அழித்துக் கொண்டிருக்கிறோம். நம்மிடம் மழைக் கணக்கு என்ற ஒன்றே இல்லை. வரக்கூடிய நாள்களில் மழை பெய்யும் நாள்கள் குறைவாகத்தான் இருக்கும். அதற்கேற்ப ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகியவற்றில் மழை நீரை சேமிப்பதே தீர்வாக இருக்க முடியும்'' என்கிறார்.
மெட்ரோ குடிநீர் வாரியம் சொல்வது என்ன?
இதையடுத்து, பொதுமக்களின் தண்ணீர் தேவை குறித்து மெட்ரோ குடிநீர் வாரியம் மற்றும் கழிவுநீரகற்று வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``எந்தப் பகுதியில் தண்ணீர் விநியோகம் குறைவாக இருக்கிறதோ அதனை சரிசெய்து வருகிறோம். குடிநீர் குழாய் இல்லாத பகுதிகளுக்கும் நீரின் அழுத்தம் குறைவாக உள்ள பகுதிகளுக்கும் லாரிகள் மூலமாக சப்ளை செய்கிறோம். தெரு குழாய்களில் எதாவது பராமரிப்புப் பணிகள் நடந்தால் இலவசமாகவே நீரை கொடுக்கிறோம். குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்கள் எந்தளவுக்குப் பணம் செலுத்தியிருக்கிறார்களோ அதற்கேற்ப விநியோகம் நடக்கும். தெருக் குழாய்களில் வரும் தண்ணீரில் குளோரின் அதிகமாக பயன்படுத்துவதால் வாசனை வரலாம். நீர் விநியோக மையத்திற்கு அருகில் உள்ள மக்களுக்கு அதன் வீரியம் சற்று அதிகமாக இருக்கலாம். அதனையும் நாங்கள் ஆய்வு செய்கிறோம். கோடை காலத்தை சமாளிக்கும் அளவுக்குப் போதிய நீர் இருப்பில் உள்ளது'' என்கிறார்.
சென்னையில் வெள்ள பாதிப்புகள் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைப்பது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. ``இந்தக் குழுவினர் முன்னெடுக்கும் பணிகள் மூலம் சென்னையின் நீர் ஆதாரம் மேம்படுத்தப்பட வேண்டும்'' என்பதே சூழலியல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.