சர்வதேச விமான சேவை மீண்டும் துவங்கிஉள்ளதால், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உலக நாடுகளுக்கு பறந்து சென்று, ஆடை தயாரிப்பு ஆர்டர்களை வசப்படுத்த வாய்ப்பு உருவாகியுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், பின்னலாடை ரகங்களை தயாரித்து, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா என உலகளாவிய நாடுகளின் சந்தைக்கு அனுப்பிவைக்கின்றனர்.ஏற்றுமதி மேம்பாட் டுக்கு, விமான போக்குவரத்து முக்கியமானதாக உள்ளது.
திருப்பூர் பின்னலாடை துறையினர், ஆயத்த ஆடை, தொழில்நுட்ப கண்காட்சிகளில் பங்கேற்பதற்காகவும், வர்த்தகர்களை சந்திப்பதற்காகவும், அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.வெளிநாட்டு கண்காட்சிகள் மூலம், புதிய வர்த்தகர்களுடனான அறிமுகம், ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் அதிகளவில் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கிறது.
இயந்திரக் கண்காட்சியில் பங்கேற்பதன்மூலம், அதிநவீன தொழில் நுட்பங்களை கண்டறிந்து, ஆடை உற்பத்தியை மேம்படுத்துகின்றனர். இதேபோல், பல்வேறு நாட்டு வர்த்தகர்கள், திருப்பூருக்கு நேரடியாக வந்து, ஆடை உற்பத்தி கட்டமைப்புகளை பார்வையிட்டு, ஆர்டர்கள் வழங்குகின்றனர்.
கோவை, பெங்களூரு, சென்னை நகரங்களில் இருந்து, விமானங்கள் மூலம், சில மணி நேரங்களில், உலகின் பல்வேறு நாடுகளுக்கு திருப்பூர் பின்னலாடை துறையினர் சென்று திரும்புகின்றனர்.
தொற்று காரணமாக, கடந்த 2020, மார்ச் மாதம், சர்வதேச விமான சேவைக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால், திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் வெளிநாட்டு பயணங்கள் பாதிக்கப்பட்டன.கொரோனா அலை ஓய்ந்ததையடுத்து, நேற்று முதல் சர்வதேச விமான சேவை மீண்டும் துவங்கியுள்ளது. இனி, உலகமெங்கும் பறந்துசென்று, வர்த்தகத்தை வசப்படுத்தலாம் என்பதால், திருப்பூர் பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:சர்வதேச விமான சேவை முடக்கப்பட்டதால், திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் தொழில் சார் வெளிநாட்டு பயணங்கள்; வெளிநாட்டு வர்த்தகர்களின் திருப்பூர் வருகை தடைபட்டது.ஆடை கண்காட்சி, வெளிநாட்டு வர்த்தகர் சந்திப்புகள், நவீன மென்பொருட்கள் உதவியுடன் மெய்நிகர் வடிவில் நடத்தப்பட்டன. இதனால், நேரமும், செலவினமும் வெகுவாக குறைந்தது. ஆனாலும், நேரடி சந்திப்பு இல்லாதது, பல வகைகளில் பின்னடைவையே ஏற்படுத்தியது.
முகம் பார்த்து நேரடியான சந்திப்பு, கலந்துரையாடல்கள், வெளிநாட்டு வர்த்தகர் மத்தியில், ஆடை ஏற்றுமதியாளர் மீதான நம்பிக்கையை, நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது; தயக்கங்களை போக்குகிறது.
சர்வதேச விமான சேவை மீண்டும் துவங்கியுள்ளதால், திருப்பூர் பின்னலாடை துறையினரின் உலகளாவிய தொழில் பயணத்தில் ஏற்பட்ட தடை விலகியுள்ளது.அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டு வர்த்தகர்கள், சீனாவுக்கு மாற்றாக, பிற நாடுகளை சேர்ந்த சிறந்த ஆடை உற்பத்தியாளர்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். எல்லாவகையிலும், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.
எனவே, நமது நாட்டு நிறுவனங்களுக்கு, ஆடை தயாரிப்பு ஆர்டர்களை அதிகளவில் வழங்க வர்த்தகர்கள் தயாராக உள்ளனர். இந்தியா - ஐக்கிய அரபு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.விமான சேவை துவங்கியுள்ளதால், வெளிநாட்டு வர்த்தகர்கள், திருப்பூர் உட்பட நாட்டின் ஆடை ஏற்றுமதி நகரங்களுக்கு வரத்துவங்குவர்.
குறிப்பாக, அரபு நாட்டு வர்த்தகர் வருகை அதிகரிக்கும்.வெளிநாட்டு கண்காட்சிகளில் பங்கேற்பது, வர்த்தகர்களை, அவர்கள் இடத்துக்கே சென்று நேரில் சந்திப்பதன் மூலம், திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் அதிகளவில் கிடைக்கும்; வர்த்தகம் பெருகும்.இவ்வாறு, அவர் கூறினார்