மேற்கு வங்கத்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட எட்டு பேர் மீதும், எரிப்பதற்கு முன் கடும் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்தில் உள்ள பர்ஷல் கிராம பஞ்., துணைத் தலைவராக இருந்த திரிணமுல் காங்., கட்சியின் பாதுஷேக், 23ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து, பர்ஷல் கிராமத்துக்கு அருகில் உள்ள போக்டுய் கிராமத்துக்கு, அன்று மாலையில் வந்த ஒரு கும்பல், அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்தது. இதில், எட்டு பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்நிலையில், உயிர் இழந்த எட்டு பேரும், முன்னதாக கடுமையாக தாக்கப்பட்டிருப்பது, பிரேத பரிசோதனை அறிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளது. கிராமத்துக்குள் புகுந்த அந்த கும்பல், மூன்று பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளது. அவர்கள் வீட்டுக்குள் சென்று கதவை மூடியவுடன், அந்த வீட்டிற்கு தீ வைத்துள்ளது.
latest tamil news
கடும் நடவடிக்கை
முதல்வர் மம்தா -பானர்ஜி நேற்று போக்டுய் கிராமத்துக்கு வந்தார். அப்போது அவர் கூறியதாவது: தீயில் கருகி உயிரிழந்தோர் குடும்பத்தில், தலா ஒருவருக்கு அரசு வேலை, 5 லட்சம் ரூபாய் நிவாரணம், சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க, தலா 2 லட்சம் ரூபாய், காயம் அடைந்தோருக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த கொடூர சம்பவத்தில், தயவு தாட்சண்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மாநிலம் முழுதும் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் வைத்துள்ளோரை பிடிக்க, சிறப்புக் குழு அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
திரிணமுல் நிர்வாகி கைது
எட்டு பேர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, திரிணமுல் காங்., கட்சியின் ராம்புஹ்ட் வட்டார தலைவர் அனருல் ஹுசைன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அவரது மொபைல் போன் எண்ணை கண்காணித்த போலீசார், தாராபித் என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். கைது செய்யப்பட்ட ஹுசைனிடம் விசாரணை நடந்து வருகிறது.