பிரதமர் மோடி இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து பரிசீலினை செய்ய வேண்டும்: தொல்.திருமாவளவன்!
21 Mar,2022
இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பரிசீலினை செய்ய வேண்டும் என்று மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் தெரிவித்தார். அரியலூர் அடுத்த கீழப்பழுவூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அவர் தொடக்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: தமிழக அரசின் பொது மற்றும் வேளாண் துறை நிதிநிலை அறிக்கை பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பொது நிதிநிலை அறிக்கையில் சமூக நீதியை நிலைநாட்டுவதுக்குரிய திட்டங்களை அறிவித்திருப்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்று பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்த எட்டு மாதங்களில் சிறப்பான நிர்வாகத்தின் மூலம் வருவாய் பற்றாக்குறையை குறைத்து இருப்பது பாராட்டுக்குரியது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு நிதி உதவி வழங்குவது இயல்பான ஒன்று தான். ஆனால் இந்தியாவுக்கு எதிராக சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து கொண்டு இலங்கை அரசு பல்வேறு நெருக்கடிகளையும், அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர்.
தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பரிசீலினை செய்ய வேண்டும்.
ரஷியா-உக்ரைனில் போரின் காரணமாக அங்கிருந்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முழுச் செலவையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ரஷியா-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா இரண்டு நாடுகளிடமும் வலியுறுத்த வேண்டும் என்றார் தொல்.திருமாவளவன். பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.