சென்னை விமான நிலையத்திற்கு கிடைத்தது சர்வதேச சான்றிதழ்
13 Mar,2022
சென்னை--சரியான நேரத்திற்கு விமானங்கள் புறப்படுவதை உறுதி செய்ததில், சென்னை விமான நிலையத்திற்கு, சர்வதேச அளவில் எட்டாவது இடம் கிடைத்துள்ளது.
விமானத் துறை, விமானங்கள், விமான நிலையங்கள் குறித்த ஆய்வுகள், கட்டுரைகள், அதிகளவிலான தரவுகளை, லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'சிரியம்' என்ற நிறுவனம் வழங்கி வருகிறது.இந்த நிறுவனம், 2021ல் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் குறித்த நேர செயல்பாடு தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், 2021ல் பெரிய சர்வதேச விமான நிலையங்களில் இருந்து, குறித்த நேரத்தில் விமானங்கள் புறப்பட்டதில், சென்னை விமான நிலையம், 89.32 சதவீதத்துடன், எட்டாவது இடம் பிடித்துள்ளது. மொத்தம், 49 ஆயிரத்து 923 விமானங்கள் சேவை வழங்கி உள்ளன. இதில், 70 வழித்தடங்களில், 81.90 சதவீத விமானங்கள் கண்காணிக்கப்பட்டு உள்ளன. 28 கோடி இருக்கைகள் என்ற அடிப்படையில், பெரிய விமான நிலையமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.இந்தியாவில், சென்னை சர்வதேச விமான நிலையம் மட்டுமே, சரியான நேரத்தில் விமானங்கள் புறப்பாட்டை உறுதி செய்ததில், சர்வதேச அளவில் இடம் பிடித்தது.