ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் கொல்லப்பட்டது எப்படி? அதிர்ச்சி தரும் புதிய தகவல்கள்
02 Mar,2022
உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த 20 வயதான நவீன் சேகரப்பா இன்று காலை ரஷ்ய ராணுவம் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்துள்ளார். அவர் மரணம் குறித்த புதிய தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இவை ஆபத்தான பகுதி என்பதால் இங்கிருக்கும் இந்தியர்கள் உக்ரைனின் மேற்கு எல்லையை நோக்கி நகர வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பாக இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில் உக்ரைன் நேரப்படி இன்று காலை 10.30 மணியளவில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா, மளிகை பொருட்களை வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ரஷ்ய ராணுவம் வெடிகுண்டுகளை வீசி திடீர் தாக்குதலை நடத்தியது. இதில், நவீன் உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால், நவீனின் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு அவரது நண்பர்களால் செல்ல முடியவில்லை. இந்த நிலையில் நவீன் உயிரிழந்திருப்பதை வெளியுறவு அதிகாரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர்.
உயிரிழந்துள்ள நவீன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். அவர் கார்கிவில் உள்ள தேசிய மருத்துவ பல்கலைக் கழகத்தில் 4ம் ஆண்டு மருத்துவ படிப்பை படித்து வந்துள்ளார். ரஷ்ய எல்லையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கார்கிவ் இருப்பதால், அங்கு ரஷ்யாவின் தாக்குதல் மற்ற நகரங்களை விட அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர்.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு நட்பு நாடாக இருந்து வரும் நிலையில் இந்திய மாணவரின் உயிரிழப்பு அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இரு நாட்டு தூதர்களையும் தொடர்பு கொண்ட மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததுடன், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா அதிரடி தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இன்றைக்குள் தலைநகர் கீவ்வை விட்டு வெளியே இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. உக்ரைன் போரை இந்திய தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் இன்று இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் உடனடியாக இன்று கீவ்வை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ரயில்கள் அல்லது வேறு எந்த போக்குவரத்தை பயன்படுத்தி இந்தியர்கள் கீவ்வை விட்டு வெளியேறி விட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்திய மாணவர் ஒருவர் ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.