மருத்துவ படிப்புக்காக உக்ரைனுக்கு தமிழக மாணவர்கள் படையெடுப்பது ஏன்?
26 Feb,2022
தமிழகத்தில் மருத்துவம் படிக்க முடியாத மாணவர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்று டாக்டர் படிப்பை படிக்கிறார்கள். அங்கு படிப்பை முடித்ததும் இந்தியாவுக்கு வந்து தங்கள் மாநிலத்தில் தகுதி தேர்வு ஒன்றை அவர்கள் எழுத வேண்டும். அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகே மாணவர்களால் தங்கள் மாநிலத்தில் மருத்துவ பணியை மேற்கொள்ள முடியும்.
இருப்பினும் வெளிநாட்டில் டாக்டருக்கு படித்து விட்டு அதன்பிறகு இந்த தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று மாணவர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்று படித்து வருகிறார்கள். குறிப்பாக உக்ரைன் நாட்டுக்கு மருத்துவ படிப்புக்காக அதிகளவில் படையெடுக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் உக்ரைனில் மருத்துவ படிப்புக்கான கட்டணம் குறைவாகும். இதன் காரணமாகவே நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பலர் தங்களது பிள்ளைகளை டாக்டர்களாக்கும் எண்ணத்தில் புரோக்கர்கள் மூலமாக உக்ரைன் நாட்டுக்கு அனுப்புவது தொடர்கதையாக இருக்கிறது.
அப்படிதான் தமிழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் உக்ரைன் நாட்டுக்கு சென்று டாக்டர் படிப்பை படித்து வருவது குறிப்பிடத்தக்கது.