முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை கேவலமாக பேசி சிக்கலில் மாட்டியுள்ளார் சீமான். இந்த பேட்டி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பெண்களையும் கேலி செய்யும் வகையில் உள்ளதால் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியில் உள்ளது. அடிப்படை வசதிகளைக்கூட மாற்றித் தராத ஆட்சியாளர்களாக தற்போது இருக்கின்றனர். மாற்றம் வேண்டும் என்றால் நம்முடைய தம்பி, தங்கைகள் தயாராக இருக்க வேண்டும்.
பணம் இருக்கிறவர்கள் தான் இங்கு ஜெயிக்க முடியும் என்றால்.. இது உழைக்கும் மக்களுக்கான இடமாக இருக்காது. ஓட்டுக்கு பணம் தருவது, எப்போதுதான் ஒழியும்? இதற்காகவே என்னுடைய முன்னோர்கள் கஷ்டப்பட்டார்கள்.
50 ஆண்டுகளாக நாட்டை ஆண்டவர்களை பழி கூறாமல், எங்களை மட்டும் கூறுவதில் என்ன அர்த்தம் உள்ளது. வீடு வீடாக சென்று சீமானுக்கு வாக்கு செலுத்த வேண்டாம். அது பாஜகவுக்கு சென்று விடும் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.
பாஜக தனித்து நிற்கிறது. அப்படி இருக்கும் பொழுது நான் எப்படி பாஜக "பி" டீம் ஆக இருப்பேன். நாங்கள் தொடர்ந்து, தனித்து தான் போட்டியிடுகிறோம். நாங்கள் தோல்வியுற்றால் அது மக்கள் தோற்றதிற்கு சமம்
சுவாசிக்க நல்ல காற்று, குடிக்க நல்ல தண்ணீர், நல்ல சுகாதார சூழல் என்று பல அடிப்படை வசதிகளை செய்வோம். வரும் 2024, 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம்.
இரண்டு கட்சிகளும் ( திமுக, அதிமுக) மாறி மாறி என்ன சாதித்திருக்கிறார்கள்? கொரோனா சூழல் காரணமாக தெரு தெருவாக வந்து, தேர்தல் பிரச்சாரம் செய்ய இயலவில்லை.
திமுகவின் கோட்டை சென்னை. அதில் பாஜக ஓட்டைப் போட தொடங்கி விட்டது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு கோட்டை ஓட்டை என விளையாட்டு தனமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
நியாயமாக பார்த்தால் துர்கா ஸ்டாலின் கோவில் கோவிலாக சென்று சாமி கும்பிடுவதற்கு பதில் பிரதமர் மோடி படத்தை வைத்து தான் சாமி கும்பிட வேண்டும்.
தில்.. இருப்பவர்கள் திமுகவில் இருக்கிறார்கள் என்றால் பிஜேபியின் வேட்பாளர்கள் ஒருவரை தூக்கி காட்டட்டும். தைரியம் இல்லாமல், எனது கட்சியின் வேட்பாளர்களை கடத்துகிறார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.
இவ்வாறு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி என்றும் பார்க்காமல் துர்கா ஸ்டாலினை கேவலமாக பேசி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்து இருக்கிறார்.
தமிழக பெண்களை பொறுத்தவரை கணவனே கண் கண்ட தெய்வம் என, வாழ்பவர்கள். அப்படி இருக்கும்போது, கோவில் கோவிலாக போய் சாமி கும்பிடுவதற்கு பதிலாக பிரதமர் மோடி படத்தை வைத்து துர்கா ஸ்டாலின் சாமி கும்பிடட்டும் என கூறி இருப்பது அரசியலை தாண்டிய விமர்சனமாகவே இது பார்க்கப்படுகிறது.
அதே சமயம் சீமான் அளித்த பேட்டியால் முதல்வர் ஸ்டாலின் உச்சக்கட்ட டென்ஷனில் உள்ளதாக கூறப்படுவதால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.