ராஜீவ்காந்தி கொலை வழக்கு- ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்ட பிணை
16 Feb,2022
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள ரவிச்சந்திரனுக்கு 3-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ரவிச்சந்திரனுக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் திகதி ஒரு மாதம் பரோல் வழங்கியது. இதனை தொடர்ந்து அவர் தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்பநாயக்கன்பட்டிக்கு வந்து தங்கி உள்ளார்.
இதன்பின்னர் அவரது கோரிக்கையை ஏற்று மேலும் 2 முறை தமிழக அரசு பரோல் நீடிப்பு வழங்கியது. இதற்கிடையில். கடந்த 7-ம் திகதி அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஆனதால் அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை நடைபெற்றது. மேல் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் அவர் ஊருக்கு திரும்பினார்.
நேற்றுடன் அவருக்கு பரோல் முடிந்து இன்று (புதன்கிழமை) சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்தார். இந்த நிலையில் தற்பொழுது 3-வது முறையாக அவருக்கு இன்று முதல் அடுத்த மாதம் (மார்ச்) 16-ம் திகதி வரை பரோல் நீடிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது