தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படை..
13 Feb,2022
தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களின் இரண்டு விசைப்படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் சிறை பிடித்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 12பேரையும் 2 விசை படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. இலங்கை கடற்படையின் இந்த தொடர் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ராமதாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்கான அனுமதிச்சீட்டை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பெற்றுக்கொண்டு நேற்று மாலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களின் இரண்டு விசைப்படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் சிறை பிடித்துள்ளது.இதையடுத்து இவர்கள் விசாரணைக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 8ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 11 பேரையும் மூன்று விசைப்படகையும் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 9ஆம் தேதியிலிருந்து மூன்று நாள்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு ரயில் மறியல் போராட்டம் நடத்த முயற்சி செய்து ரயில் நிலைய வளாகத்துக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த நிலையில் நேற்று மூன்று நாட்கள் கழித்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற நிலையில் தற்போது மீண்டும் இலங்கை கடற்படையினர் இரண்டு விசைப்படகையும், 12 பேரையும் கைது செய்துள்ளனர். மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.