தமிழகத்தில் நீட் பிரச்சனையையும் தாண்டி பல முக்கிய பிரச்சினைகள் நடந்து கொண்டு இருக்கிறது அது மத்திய உளவுத்துறையின் மூலம் ஆளுநருக்கு கிடைத்துள்ளது. அதாவது National Investigation Agency தமிழக டிஜிபிக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது, அது தமிழக ஆளுநருக்கும் கிடைத்திருக்கிறது, அதேபோல தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக மத்திய உளவுத்துறையின் சீனியர் அதிகாரி ஒருவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
நீட் பிரச்சனை எல்லாம் கடந்து தமிழகத்திற்கு ஆப்த்தை விளைவிக்க கூடிய முக்கிய பிரச்சனைக்களை ஆளுநர் அடையாளம் கண்டு வைத்துள்ளார் என்றும், அதை விரைவில் அமித்ஷாவிடம் வழங்க இருக்கிறார் என்றும் டெல்லி மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் கூறியுள்ளார். தமிழகத்தில் இடதுசாரி தீவிரவாதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், மாவோயிஸ்ட், நக்சலைட் ஊடுருவல்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதை குறித்து ஆளுநர் ரிப்போர்ட் தயாரித்திருப்பதாகவும் ராஜகோபாலன் பகீர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு என்பது பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அமைதி பூங்காவாகவே இருந்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா தனது உரையில் இதை அடிக்கடி குறிப்பிட்டு பேசுவதை அனைவரும் அறிந்த ஓன்று. அந்த அளவுக்கு சட்ட ஒழுங்கு உள்ளிட்டவை தமிழகத்தில் மிக சிறப்பாக இருப்பதும், சாதி மத குரோதம் இன்றி சகோதரத்துவ மானப்பான்மை மேலோங்கி இருப்பதுமே இந்த அமைதிக்கு காரணம். ஆனால் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் விடுதலை புலிகள் ஊடுருவல் இருப்பதாகவும், மாவோயிஸ்ட், நக்சல் தாக்கம் அதிகமாகி இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினை வாதத்தை கையாளும் பணியில் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, ஆளுநர் ஆர். என் ரவியை மத்திய அரசு தமிழகத்திற்கு ஆளுநராக நியமித்ததாக கூறப்படுகிறது.
தமிழக ஆளுநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என் ரவி ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆவார். அதேபோல அவர் காவல்துறை அதிகாரியாக இருந்தபோது உளவுத்துறையில் சிறந்த நிபுணத்துவம் கொண்டவர் என்பதால் அவர் தமிழகத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டபோதே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆர்.என் ரவி பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். 1976ஆம் ஆண்டு கேரள மாநில கேட்ட ஐபிஎஸ் ஆக தேர்வானார். தற்போதைய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், காவல் துறை பின்புலம் கொண்ட ரவி நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என திமுக கூட்டணி கட்சிகள் இன்றளவும் விமர்சித்து வருகின்றன.
அதாவது ஆர்.என் ரவி, காவல்துறையில் உளவுப் பிரிவில் நீண்ட நெடிய அனுபவம் பெற்றவர், துறை ரீதியாக இருந்தாலும் சரி, அவர் இதற்கு முன்னர் ஆளுநராக பதிவிவகித்த வடகிழக்கு மாநிலத்தில் அவர் சந்தித்த சவால்களாக இருந்தாலும் சரி தனக்கு கொடுக்கப்பட்ட இலக்கை மிக துல்லியமாக நிறைவேற்றி அதில் வெற்றி கண்டவர் ஆவர். அதுதான் இவர் தமிழகத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. காஷ்மீர் வட கிழக்கு மாநிலங்களில் நீண்ட காலமாக நிலவிவந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்ததில் ஆர்.என் ரவிக்கு முக்கிய பங்கு உண்டு.
வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினை வாதத்தை முன்வைத்து நடைபெற்றுவந்த கலவரங்களை ஒடுக்கியவர், அது மட்டுமின்றி பிரிவினைவாதிகளை சரண்டையவைத்து, பேச்சுவார்த்தை நடத்தி அங்கு அமைதியை நிலைநாட்டியதில் அம்மாநிலத்தின் ஆளுநராக வெற்றி வாகை சூடியவர் ஆர்.என் ரவி. பயங்கரவாத ஒழிப்பு, உளவுத் தகவல்களை திரட்டுவது மற்றும் சர்வதேச அளவில் ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவது போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஆர்.என் ரவி, இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள தமிழகம் மற்றும் அதை ஒட்டியுள்ள இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கம் போன்றவற்றை கவனத்தில் கொண்டு ரவியை மத்திய அரசு ஆளுநராக நியமித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆளுநர்-முதல்வர் ஸ்டாலின் இடையே நீட் விவகாரத்தில் மோதல் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஆளுநர் 8 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருந்த நிலையில் திடீரென அந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஆளுநரின் பயணம் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு டெல்லி மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் நீட்டை தாண்டி அதை விட முக்கிய பிரச்சனைகள் தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதை ஆளுநர் ஆர்.ரவி அடையாளம் கண்டுள்ளார் என்றும் அதை அமித்ஷாவிடம் அது குறித்து அறிக்கையை ஒப்படைக்க போகிறார் என்றும் கூறியுள்ளார். இது குறித்து ராஜகோபாலன் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நீட் பிரச்சனையையும் தாண்டி பல முக்கிய பிரச்சினைகள் நடந்து கொண்டு இருக்கிறது அது மத்திய உளவுத்துறையின் மூலம் ஆளுநருக்கு கிடைத்துள்ளது. அதாவது National Investigation Agency தமிழக டிஜிபிக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது, அது தமிழக ஆளுநருக்கும் கிடைத்திருக்கிறது, அதேபோல தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக மத்திய உளவுத்துறையின் சீனியர் அதிகாரி ஒருவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவர் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களையும் சந்தித்துள்ளார். ஆளுநரையும் சந்தித்துள்ளார். அவர்களிடம் அவர் பயங்கர தகவல் ஒன்றை கூறியிருக்கிறார். அதைப்பற்றிதான் ஆளுநர் அவர்கள் மத்திய அரசுடன் விவாதிப்பார் என தகவல் கிடைத்திருக்கிறது, அதாவது இடதுசாரி தீவிரவாதம் திருப்பூர், கோவையில் மாபெரும் புரட்சியை செய்யவேண்டுமென திட்டமிட்டு அதற்கு தயாராக இருப்பது தான் அந்த தகவல்.
மாவோயிஸ்ட், நக்சலைட் ஊடுருவல் தமிழகத்தில் ஆரம்பித்துவிட்டது என்ற தகவலை முதலமைச்சரிடமும் மத்திய உளவுத் துறையினர் தெரிவித்துள்ளனர். அதை எப்படி நாம் கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து ஆளுநர் மத்திய அரசுடனும் NIAவுடனும் மற்றும் உயர் அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசிக்க இருக்கிறார். அதேபோல் கள்ளப்பணம் தமிழகத்தில் அதிக அளவில் ஊடுருவி இருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து இலங்கை மூலமாக கேரளா வழியாக தமிழகத்தில் நுழைய இருக்கிறது என தகவல்கள் எல்லாம் வர ஆரம்பித்தது, எனவே இந்த 5 முக்கிய பிரச்சினைகளுடன்தான் ஆளுநர் டெல்லிக்கு வர உள்ளார் என ராஜகோபாலன் கூறியிருந்தார். இந்நிலையில்தான் ஆளுநரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.