குடியேற்ற முகாமில் 56 இந்திய மீனவர்கள்
08 Feb,2022
கொழும்பு : இலங்கையில், நீதிமன்றம் விடுவித்த இந்திய மீனவர்கள், 56 பேர் தனிமைப்படுத்தல் காலம் முடிந்ததை அடுத்து, கொழும்பு குடியேற்ற முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிச.,ல் இந்திய மீனவர்கள், 56 பேர் இலங்கை மன்னார் வளைகுடா பகுதியில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்; அவர்களின், 10 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மனிதாபிமான அடிப்படையில் மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசுக்கு, மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து கடந்த ஜன., 25ல், மீனவர்கள், 56 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. இது குறித்து யாழ்ப்பாணம் சிறை கண்காணிப்பாளர் சந்தனா ஏகநாயகே கூறியதாவது:சிறையில்
இருந்தபோது மீனவர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால் விடுதலையான மீனவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். கொரோனா விதிமுறைகளின்படி மீனவர்களின் தனிமைக் காலம் முடிந்தது. இதை அடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள குடியேற்ற முகாமிற்கு மீனவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே கடந்த 1ம் தேதி இலங்கையின் வடக்கு கடற்பகுதியில், மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள்,21 பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.