பெண்ணை கொன்ற கொத்தனார் கைது
செங்கல்பட்டு-செங்கல்பட்டில், பெண்ணை கழுத்து நெரித்து கொலை செய்த கொத்தனாரை, போலீசார் நேற்று, கைது செய்தனர்.செங்கல்பட்டு, பாசித்தெருவில் உள்ள தனியார் பள்ளி கட்டுமான பணியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தார் வேலை செய்கின்றனர்.இதில் விழுப்புரம் அடுத்த, காரணை கிராமத்தைச்சேர்ந்த பஞ்சன் மனைவி மலர், 45, என்பவர், சித்தாள் வேலை செய்துவந்தார்.
நேற்று முன்தினம், பள்ளி வளாக அறை ஒன்றில் இறந்து கிடந்தார்.செங்கல்பட்டு போலீசார் விசாரணையில், மலருடன் தொடர்பில் இருந்த கொத்தனார் கரிகாலன், 48, என்பவர், அவரை கொலை செய்தது தெரிந்தது. இருவருக்கும் 15 ஆண்டுகளாக தொடர்பு இருப்பதும் தெரிந்தது.இதையடுத்து, கரிகாலனை நேற்று கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர். ஆசைக்கு இணங்க மறுத்ததில் ஏற்பட்ட தகராறில், மலரின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக, கரிகாலன் வாக்குமூலம் அளித்தார்.
'ஓசி' பிரியாணியில் முன்விரோதம்; ஓட்டல் உரிமையாளருக்கு வெட்டு
திருமழிசை-திருமழிசை பகுதியில் முன்விரோதம் காரணமாக ஓட்டல் உரிமையாளரை சராமரி வெட்டப்பட்டது குறித்து, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.வெள்ளவேடு அடுத்த, திருமழிசையைச் சேர்ந்த துரைபாண்டி மகன் மகாராஜா, 36. இவர் தன் சகோதரர்கள் அருணாசல பாண்டியன், கணேசன் ஆகியோருடன் சேர்ந்து, திருமழிசை பிரதான சாலையில் கஸ்துாரி பவன் என்ற ஓட்டலை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல், 18ம் தேதி கடைக்கு வந்த நபர்கள், ஓசியில் பிரியாணி கேட்டபோது ஏற்பட்ட தகராறில் அருணாசல பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில், வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர்.விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், 22, வேலன், 20, உட்பட எட்டு பேரை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.பாதிரிவேடு பகுதியில் தலைமறைவாக இருந்த எபி என்ற எபினேசர் ராஜா, 34, என்பவரை கைது செய்து, மாவட்ட எஸ்.பி., வருண்குமார் பரிந்துரையின்பேரில், மகலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவின்படி, குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், எபினேசர் ராஜாவின் கூட்டாளிகள் மூன்று பேர், நேற்று முன்தினம் இரவு, கஸ்துாரி பவன் ஓட்டலுக்கு சென்று, உரிமையாளர் மகாராஜாவை சரமாரியாக வெட்டி, தப்பி ஓடிவிட்டனர்.படுகாயமடைந்த மகாராஜன், வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளவேடு போலீஸார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
முருகன் கோயில் கூரைக்கு தீ வைப்பு
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் முருகன் கோயில் முன்புற கூரைக்கு தீ வைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் லட்சுமியா புரத்தை சேர்ந்தவர் கணேசன் 48. கடந்த 32 ஆண்டுகளாக திருஆவினன்குடி அழகன் என்ற பெயரில் பழனி பாதயாத்திரை குழுவை நடத்தி வருவதுடன், அப்பகுதியில் முருகன் கோயில் கட்டி நிர்வாகம் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு கோயிலுக்கு அருகே அப்பகுதி இளைஞர்கள் சிலர் மது, கஞ்சாவை பயன்படுத்தி உள்ளனர். இதை தட்டிக்கேட்ட கணேசனை அவர்கள் தாக்கி உள்ளனர். பின்னர் கோயிலுக்கு முன்பு இருந்த கூரையை தீ வைத்து எரித்தனர்.
கூரை, கிரைண்டர் உள்ளிட்ட உணவு தயாரிப்பிற்கான பொருட்கள் எரிந்து சேதமானது. தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.கோயில் நிர்வாகி கணேசன் கூறியதாவது : ஏற்கனவே இப்பகுதியில் சமூகவிரோத செயல்கள் குறித்து போலீசாரிடம் தெரிவித்தோம். ஆனால் அவர்களை எச்சரித்து அனுப்பி விடுகின்றனர். இதே நிலை தொடர்வதால் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு பயம் இல்லா நிலை ஏற்படுகிறது, என்றார்.
அம்பிளிக்கை அருகே கார் கவிழ்ந்து 2 பெண்கள் பலி
அம்பிளிக்கை : திண்டுக்கல் மாவட்டம் அம்பிளிக்கை அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்ததில் சிங்கம்புணரியைச் சேர்ந்த இரு பெண்கள் பலியாகினர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கிருங்காக்கோட்டையைச் சேர்ந்த உறவினர்கள் பாலகிருஷ்ணன், சிலம்பரசன் கோவையில் வசிக்கின்றனர். நேற்று காலை சிங்கம்புணரியில் நடந்த உறவினர் வீட்டுத் திருமணம் ஒன்றில் கலந்து கொண்டனர்.திருமணம் முடிந்து காரில் சிலம்பரசன் 32, பாலகிருஷ்ணன் 43, நந்தினி 30, மேனகா 32, சத்யா 38, இளங்கோ 52, பிரணவ் 5, நிதிக்சா 2, ஆகியோர் கோவைக்கு திரும்பினார்.
பாலகிருஷ்ணன் காரை ஓட்டினார். ஒட்டன்சத்திரம் -- தாராபுரம் ரோட்டில் அம்பிளிக்கை அருகே இந்திராநகர் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்தில் மோதி குப்புற கவிழ்ந்தது. பாலகிருஷ்ணன் மனைவி மேனகா 32, செல்வம் மனைவி சத்யா 38, சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றவர்கள் காயங்களுடன் தப்பினர். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ்சில் தவற விட்ட 3 மாத குழந்தையை தேடி வந்த பெற்றோர்
மரக்காணம் : மரக்காணம் அருகே, பஸ்சில் தவற விட்ட 3 மாத குழந்தையை தேடி, பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.
சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்தவர் கவியரசு, 28; பெயின்டர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த விமலா, 32 என்ற பெண்ணை, இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, 2021 அக்டோபர் 24ல், ஸ்ரீ வர்ஷன் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. சில தினங்களுக்கு முன், விமலா வேலுார் சென்று, சாலையோரம் தள்ளுவண்டி கடை போட்டு தின்பண்டங்களை விற்று வந்தார்.
கடந்த 5ம் தேதி அங்கு சென்ற கவியரசு, விமலாவிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த விமலா, குழந்தையை துாக்கி செல்லுமாறு கூறியுள்ளார். உடனே கவியரசு, அன்றிரவு 11:00 மணிக்கு குழந்தையுடன் பஸ்சில் புதுச்சேரிக்கு கிளம்பினார்.பஸ்சில் இருந்த சரஸ்வதி என்ற பெண்ணிடம் குழந்தையை கொடுத்தவர், கல்பாக்கத்தில் பஸ் நின்றபோது இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அதற்குள் பஸ் சென்று விட்டதால், கவியரசு வேறு பஸ்சில் புதுச்சேரி பஸ் நிலையம் வந்து குழந்தையை தேடி அலைந்துள்ளார்.
குழந்தையை தவற விட்டதாக விமலாவிடம் கூறி, அழுதுள்ளார். குழந்தையை பஸ்சில் விட்டுச் சென்ற நபரை போலீசார் தேடி வருவதாக, நேற்று நாளிதழ்களில் செய்தி வெளியானதை கண்டனர். இதையடுத்து, கவியரசு, விமலா இருவரும் நேற்று கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து, குழந்தையை கேட்டுள்ளனர்.
குழந்தை அவர்களுடையது என்பதற்கான ஆதாரம் எதையும் எடுத்து வரவில்லை. குழந்தை, தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்கப்பட்டதால், கலெக்டர் வாயிலாக தான் பெற வேண்டும்.இன்று கலெக்டர் அலுவலகம் சென்று, உரிய ஆவணங்களை கொடுத்து குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு கூறி, அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மூதாட்டி கொலையில் திருப்பம்: நாடகமாடிய கணவர் கைது
ஆர்.எஸ்.மங்கலம் : ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில்,மனைவியை கணவரே கொலை செய்துவிட்டு, நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் பரம்பை ரோடு செட்டியமடை பகுதியில்,வசித்து வருபவர் சந்தியாகு என்ற சந்திரசேகர் 82, இவரது மனைவி ஞானசவுந்தரி 78,இவர்களது குழந்தைகள் வெளியூரில் வசித்து வருவதால், கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். பிப்.5ல், இரவு 8:30 மணிக்கு ஞானசவுந்தரி வீட்டில் மர்மமான முறையில், இறந்து கிடப்பதாகவும், மர்ம நபர்கள் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க செயினை திருடிச் சென்று விட்டதாகவும், கணவர் சந்தியாகு ஆர்.எஸ்.மங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
போலீசார், இறந்த மூதாட்டி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கணவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார், மோப்ப நாய், கைரேகை பதிவுகள், அலைபேசி உரையாடல், கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளில் இருந்த கைரேகை உள்ளிட்டவைகளை சேகரித்து விசாரணை செய்தனர்.விசாரணையில், மனைவியை அரிவாளை பயன்படுத்தி பின்பக்க தலையில் அடித்தும், கழுத்தை நெரித்தும், சந்தியாகு கொலை செய்தது தெரிந்தது.
அதைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், மனைவியிடம் குழந்தைகள் கொடுக்கும் பணத்தை தனது செலவிற்கு தராததால் ஏற்பட்ட பிரச்னையில் கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து, மனைவியை கொலை செய்தது எப்படி என்பது குறித்து, சந்தியாகு போலீசார் முன்னிலையில் நடித்து காட்டினார். தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் இன்ஸ்பெக்டர் தேவி, சந்தியாகுவை கைது செய்து சிறையில் அடைத்தார்.
சிறை கைதி தற்கொலை வழக்கு; திண்டிவனம் வழக்கறிஞர் கைது
கடலுார் : கடலுார் மத்திய சிறையில் கைதி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், ஆறு ஆண்டுகளுக்கு பின், திண்டிவனம் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வட ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவர், 2016ல் கொலை செய்யப்பட்டார். ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த முருகன், ஜெயகுமார், 32; ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில், சுதாகர் தம்பி வழக்கறிஞர் குமார், 42, என்பவர் சொத்துக்காக, அண்ணனை கூலிப்டையை ஏவி கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து, வழக்கறிஞர் குமார் மற்றும் கூலிப்படையாக செயல்பட்ட முருகன், ஜெயகுமார் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்த வழக்கறிஞர் குமார், 'என்னை போலீசில் காட்டிக் கொடுத்ததால், பேசியபடி பணம் தர மாட்டேன். ஜாமினில் எடுக்கவும் மாட்டேன். மீறி வெளியில் வந்தால் கொலை செய்து விடுவேன்' என, ஜெயகுமார் மற்றும் முருகனை மிரட்டியுள்ளார்.இதனால் மனமுடைந்த ஜெயகுமார், கடிதம் எழுதி வைத்து, 2016ல் சிறையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.இதற்கிடையில், குமார் ஜாமினில் வெளியில் வந்து விட்டார். ஜெயகுமார் தற்கொலை வழக்கு, 2020ல் சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், வழக்கறிஞர் குமாரை வட ஆலப்பாக்கம் கிராமத்தில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். கூலிப்படையாக செயல்பட்டவரை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில், ஆறு ஆண்டுகளுக்கு பின் வழக்கறிஞரை போலீசார் கைது செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது
ஊட்டி அருகே புலி; கிராம மக்கள் கிலி
ஊட்டி : ஊட்டி அருகே, கிராமத்தில் குட்டியுடன் உலா வரும் புலியை பிடித்து வனத்தில் விடுமாறு, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே, மாவுக்கல், காவிலோரை பகுதிகளில் குட்டியுடன் புலி நடமாட்டத்தை மக்கள் பார்த்துள்ளனர்.கடநாடு ஊராட்சி தலைவர் சங்கீதா சிவமணி கூறுகையில், ''எங்கள் கிராமத்தில் சில நாட்களாக புலி நடமாடுவதால் பணிக்கு செல்ல முடியவில்லை. குட்டியுடன் புலி சுற்றி வருவதை மக்கள் பார்த்துள்ளனர்.
கண்காணிப்பு கேமரா பொருத்தி, கூண்டு வைத்து புலியை பிடித்து வனத்தில் விட வேண்டும்,'' என்றார்.மாவட்ட வன அதிகாரி சச்சின் கூறுகையில், ''குறிப்பிட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.
சூட்கேசில் இளம்பெண் உடல்: திருப்பூரில் பயங்கரம்
திருப்பூர் : இளம்பெண்ணை கொன்று, சடலத்தை சூட்கேசில் அடைத்து, சாக்கடை கால்வாயில் வீசியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர், தாராபுரம் ரோடு, பொல்லிக்காளி பாளையம் அருகே, சாலையோரம் உள்ள கழிவு நீர் கால்வாய்க்குள், துர்நாற்றத்துடன் ஒரு சூட்கேஸ் கிடந்தது. நல்லுார் போலீசார் சூட்கேசை திறந்து பார்த்த போது, 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் சடலம் இருந்தது.சடலத்தின் நெற்றியில் பொட்டு, கையில் வளையல், காதில் தோடு இருந்தது. வாய் மற்றும் வலது கை பின்புறம் காயங்கள் காணப்பட்டன. கழுத்தை நெரித்ததற்கான அடையாளம் இருந்தது. கையில் 'குயின்' என, ஆங்கில எழுத்துகளால் பச்சை குத்தப்பட்டிருந்தது.
போலீசார் கூறுகையில், 'கொல்லப்பட்ட பெண் யார், எந்த ஊர் என விசாரணை நடக்கிறது. வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.'பிரேத பரிசோதனை முடிவில், எப்படி கொல்லப்பட்டார் என்பது தெரியவரும். துணை கமிஷனர் தலைமையில், ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது' என்றனர்.
சிசிடிவி'யில் இருவர்
சூட்கேஸ் கிடந்த இடம் அருகே சாலையில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் பார்வையிட்டனர். 6ம் தேதி இரவு 10:45 மணியளவில், பெருந்தொழுவு ரோடு வழியாக, தாராபுரம் சாலையை நோக்கி, பைக்கில் இருவர் சந்தேகப்படும் விதமாக செல்வது தெரிந்தது.அதே பைக்கை வேறு இடத்தில் இருந்த, 'சிசிடிவி' கேமராவில் பார்க்கும்போது, பைக்கில் வந்த இருவர் சூட்கேஸ் பெட்டியை கால்வாய்க்குள் வீசி, மீண்டும் அதே சாலையில் திரும்பி செல்வது தெரிந்தது. அவர்கள் யார் என, விசாரணை நடக்கிறது.