கோவின் போர்ட்டலில் பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி மற்றும் மருத்துவ அத்தியாவசிய சேவைகளைப் பெற ஆதார் கட்டாயமில்லை என ஏற்கனவே UIDAI தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்..
பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட 9 அடையாள ஆவணங்களில் ஒன்றை காட்டி தடுப்பூசி (Covid Vaccine) போடலாம் என்று நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் சூர்யா காந்த் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்விடம் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
COVID-19 தடுப்பூசியை (Covid Vaccine) வழங்குவதற்கு, கோவின் போர்ட்டலில் ஆதார் அட்டை கட்டாயமாக வலியுறுத்தப்படுவதாகக் கூறி, சித்தார்த்சங்கர் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்துவந்தது.
இந்த பொதுநல வழக்கு தொடர்பாக, உச்சநீதிமன்றம் அக்டோபர் 1, 2021 அன்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது தொடர்பாக நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
"அக்டோபர் 1, 2021 தேதியிட்ட இந்த நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கோவின் போர்ட்டலில் பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்றும், ஒன்பது அடையாள ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்கலாம் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது" என உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
மேலும், அடையாள அட்டை இல்லாத சுமார் 87 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆதார் அட்டை தகவல்களை வழங்காததால் தடுப்பூசி மறுக்கப்பட்டதாக கூறும் மனுதாரரின் கவலை தேவையில்லாதது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் உள்ள சுகாதாரம், செல்லுபடியாகும் பாஸ்போர்ட் ஐடியை அளித்தும், மனுதாரருக்கு தடுப்பூசி போட மறுத்த சம்பந்தப்பட்ட தனியார் தடுப்பூசி மையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய சுகாதார அமைச்சகம், மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது
தடுப்பூசி மறுக்கப்படுவதால் இந்திய குடிமகனுக்கு அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது. தடுப்பூசி உரிமையைப் பாதுகாப்பதற்காக, முழு நாட்டிலும் ஒரே மாதிரியான முறையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விதிகள்/கொள்கைகளை பாரபட்சமற்ற முறையில் அமல்படுத்த வேண்டும் என்று இந்த பொதுநலன் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.