குடும்பக் கட்டுப்பாட்டுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தை: செலவுகளை ஏற்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
07 Feb,2022
குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைக்கு, அதன் 21 வயது வரையிலான கல்வி, வளர்ப்பு செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் பெண் ஒருவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் அந்த பெண். அதற்கான சான்றிதழையும் பெற்றார்.
இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற பெண்ணிடம், மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, தமிழக அரசு இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு கர்ப்பம் தரிக்காது என மனுதாரர் முழுமையாக நம்பியுள்ளார். மருத்துவமனை அவருக்கு உரிய முறையில் அறுவை சிகிச்சை செய்யவில்லை என்பது தெளிவாகிறது.
எனவே, மனுதாரருக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவருக்கு பிறந்த குழந்தைக்கு 5 வயதாகும்போது, அரசு பள்ளி அல்லது தனியார் பள்ளியில் சேர்த்து, இலவச கல்வியை அரசு வழங்க வேண்டும். குழந்தையின் கல்விக்கட்டணம், பாடப்புத்தகங்கள், எழுதுபொருட்கள் உள்ளிட்ட செலவையும் அரசே ஏற்க வேண்டும்.
உணவு உள்ளிட்ட மற்ற வளர்ப்பு சார்ந்த தேவைகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் என கணக்கிட்டு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை பட்டப்படிப்பு முடிக்கும் வரை அல்லது 21 வயது எட்டும் வரை அரசு வழங்க வேண்டும். இலவசக் கல்வி வழங்குவதோடு, மனுதாரரின் 3-வது குழந்தையையும் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் அரசு சேர்க்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது .