இந்திய வம்சாவளிக்கு மரண தண்டனை
07 Feb,2022
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தல் வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிஷோர் குமார் ரகுவன்,41,'ஹெராயின்' போதைப் பொருளை ஒரு பையில் வைத்து, புங் ஆ கியாங் என்பவரிடம் கொடுத்துள்ளார். அப்போது இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தில் நேற்று சிங்கப்பூர் நீதிமன்றம், கிஷோருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. புங் ஆ கியாங்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் சட்டப்படி 15 கிராமிற்கு அதிகமான போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை வழங்கப்படும். கிஷோர் 36 கிராம் ஹெராயின் வைத்திருந்ததால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 'பையில் போதை மருந்து இருந்தது தெரியாது; அதை 'கல்' என கூறி ஒருவர் புங்கிடம் வழங்குமாறு கூறினார்' என கிஷோர் தரப்பில் வாதாடப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி, போதைப் பொருள் கடத்தலில், கிஷோர் இடைத்தரகராக செயல்பட்டதற்கு ஆதாரம் உள்ளதாக கூறி மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.