சென்னை வானொலி நிலையங்களை மூடுவதா?-
02 Feb,2022
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை வானொலி நிலையத்தின் முதன்மை அலைவரிசை சேவையை நிறுத்த பிரசார்பாரதி அமைப்பு முடிவு செய்திருப்பதாகவும், எந்த நேரமும் அதன் சேவை நிறுத்தப்படக்கூடும் என்று தெரியவந்துள்ளது. சென்னை வானொலி நிலையத்தின் இரு அலைவரிசைகள் அண்மையில் மூடப்பட்ட நிலையில், சென்னை வானொலியின் அடையாளமான முதன்மை அலைவரிசையையும் மூட முயல்வது அதிர்ச்சியளிக்கிறது.
விவசாயம், குடும்பநலம், இசை நிகழ்ச்சிகள், நாடகம், கிராமப்புற இசை, செய்திகள், திரை இசை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான நிகழ்ச்சிகள் என பலவகை நிகழ்ச்சிகள் சென்னை ‘ஏ’ அலைவரிசையில் ஒலி பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளைக் கேட்பதற்காக லட்சக்கணக்கான நேயர்கள் உள்ளனர். தமிழ்ப் பண்பாடு, கலைகள் ஆகியவற்றின் தூதராகவும் இந்த அலைவரிசை திகழ்கிறது.
சென்னை ‘ஏ’ ஒலி பரப்பு நேற்றுடன் நிறுத்தப்பட இருந்ததாகவும், தொழில் நுட்ப காரணங்களால் அம்முடிவு கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எந்த நேரமும் சென்னை ‘ஏ’ அலைவரிசை நிறுத்தப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.
சென்னை ‘ஏ’ அலை வரிசை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டால், அது சென்னை வானொலி நிலைய நேயர்களுக்கு பேரிழப்பாக அமைந்து விடும்.
சென்னை ‘பி’ அலைவரிசை மூடப்பட்டதை அப்போதே கண்டித்திருந்தேன். சென்னை ‘ஏ’ அலைவரிசை மூடப்பட்டால் சென்னை வானொலியில் 3 அலை வரிசைகள் மட்டுமே இருக்கும். வர்த்தக ஒலிபரப்புக்கும் முடிவு கட்டப்பட்டால் அதன்பிறகு பண்பலைகள் மட்டுமே சென்னை வானொலியில் இருக்கும்.
எனவே, சென்னை ‘ஏ’ அலைவரிசையை மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள எந்த மத்திய மற்றும் சிற்றலை ஒலிபரப்பையும் மூடும் திட்டத்தை பிரசார்பாரதி கைவிட வேண்டும். மாறாக, நிகழ்ச்சிகளின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்தி வானொலிகளின் வருவாயை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.