இந்தியாவுக்கு ரஷ்ய ஏவுகணை அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை
29 Jan,2022
இந்தியாவுக்கு 'எஸ் - 400' ஏவுகணை வழங்கி, ஆசிய பிராந்தியத்தில் ஸ்திரமற்ற சூழலை உருவாக்க ரஷ்யா முயற்சிப்பதாக அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது.
கடந்த, 2018 அக்.,ல் ரஷ்யாவிடம் இருந்து ஐந்து 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை, 38 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது.தரையில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் இந்த நவீன ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கு, அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ஏவுகணைகளை வாங்கினால், இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
ஆனால் இதற்கு அஞ்சாத இந்தியா, 'நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை' எனக் கூறி, திட்டமிட்டபடி ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கப் படும் என தெரிவித்து விட்டது.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது:இந்தியா, ரஷ்யாவிடம் 'எஸ் - 400' ஏவுகணை சாதனம் வாங்குவது குறித்த அமெரிக்காவின் கவலை நீடிக்கிறது. பொருளாதார தடைரஷ்யா, ஆசிய பிராந்தியத்தில் மட்டுமின்றி அதை தாண்டியும் ஸ்திர மற்ற சூழலை உருவாக்க முயற்சிக்கிறது.
இதற்கு, இந்தியாவின் எஸ் - 400 ஏவுகணை ஒப்பந்தம் வலு சேர்க்கும். ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கும் முடிவை அமெரிக்கா இன்னும் எடுக்கவில்லை. இது தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.