ஏர் இந்தியா’ அதிகாரப்பூர்வமாக ஒப்படைப்பு.. 69 ஆண்டுகள் காத்திருப்புக்கு முடிவு!!
27 Jan,2022
டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக இன்று ஒப்படைத்துள்ளது.
1939ம் ஆண்டு டாடா ஏர் சர்வீசஸ் என்ற பெயரில் ஜே.ஆர்.டி.டாடாவால் தொடங்கப்பட்டு பின்னர் டாடா ஏர்லைன்ஸ் என பெயர் மாற்றப்பட்ட, ஏர் இந்தியா நிறுவனத்தை 1953ம் ஆண்டு மத்திய அரசு நாட்டுடைமை ஆக்கியது. மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடன் சுமையும் கடுமையாக அதிகரித்தது. இதனிடையே கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக விமான சேவைகள் ரத்தானதால், ஏர் இந்தியா மேலும் சிக்கலுக்கு ஆளானது.
இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தை விற்பனை செய்யும் முயற்சிகளில் மத்திய அரசு இறங்கியது. அதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் டாடா குழுமம் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தது. டாடா குழுமத்தின் அங்கமான Talace Private Limited அதிக தொகைக்கு ஏலம் கேட்டிருந்ததால், கடந்த ஆண்டு அக்டோபரில் ஏர் இந்தியா நிறுவனம், டாடா குழுமத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய விமான நிறுவனங்கள் மற்றும் AISATS எனப்படும் விமான நிலைய பணிகளை கையாளும் நிறுவனங்கள் டாடா வசம் சென்றுள்ளன. இதன் மூலம் 69 ஆண்டுகளுக்கு பின்னர் ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா குழுமத்திடமே சென்றுள்ளது.
ஏர் ஏசியா, விஸ்தாரா ஆகிய நிறுவனங்களுடன் சேர்த்து, டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் மூன்றாவது விமான நிறுவனமாக ஏர் இந்தியா மாறியுள்ளது.
இதனையடுத்து ஏர் இந்தியா நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளை டாடா குழுமத்திடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வந்தன. இன்று அந்த பணிகள் 100% முழுமையடைந்து டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாகங்கள் ஒப்படைக்கப்பட்டன.
ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படும் முன்பாக, இன்று மதியம் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரை வரவழைத்து பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். இதனையடுத்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றையும் டாடா சன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை மேம்படுத்தும் நோக்கில் அதனை சீரமைக்கும் பணிகளில் டாடா குழுமம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.