ரூ.7 கோடி கள்ளநோட்டு பறிமுதல்; 7 பேர் கைது
27 Jan,2022
மும்பையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.7 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தகிசார் செக்போஸ்டில் குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரில் போலீசார் நடத்திய சோதனையில் 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பண்டல் பண்டலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக 250 பண்டல்களுடன் ரூ.5 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையின்பேரில், அந்தேரி புறநகர் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சோதனையை மேற்கொண்டனர். அங்கு, ரூ.2 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து லேப்டாப், 7 செல்போன்கள், ரூ.28,170 செல்லத்தக்க ரொக்கப்பணம், ஆதார், பான் கார்டுகள், டிரைவிங் லைசென்ஸ்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.