.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 128 பேருக்கு 2022 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, கலை, விளையாட்டு, தொழில் என பல்வேறு துறைகளை சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டும். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு ( பத்ம விருதுகள் 2022) பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ விருது பெருவோர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 17 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 107 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பழம்பெரும் நடிகை சவுக்கார் ஜானகி உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.
பத்மஸ்ரீ விருதுபெரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் :
1. முத்து கண்ணம்மாள் - சதிராட்டக் கலைஞர்
இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த சதிர் நடனக் கலைஞர். 84 வயதான இவர் தமிழகத்தின் கடைசி தேவதாசி. புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவரடியார்களில் இவரும் இருவராக விளங்கினார். இவர் இறைவன் முருகணுக்காக தினமும் 400 படிகள் ஏறி பாடல் பாடி, சதிராட்டம் ஆடியவர். முத்து கண்ணம்மாள் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு தக்ஷிண சித்ரா விருது பெற்றுள்ளார்.
2. ஏ.கே.சி. நடராஜன் - கிளாரிநெட் இசைக்கலைஞர்
சிறு வயதிலேயே நாதஸ்வரம் கற்றுத் தேர்ந்த நடராஜன், மேலைநாட்டுக் இசைக்கருவியான கிளாரினெட்டை மரு உறுவாக்கம் செய்தார். கிளாரிநெட் கருவியில் இருந்த பொத்தான்களை கர்நாடக இசைக்கேற்ப மாற்றியமைத்து, பல்வேறு இசை வடிவங்களை வாசித்து அசத்தியவர். 92 வயதான அவருடைய திறமையை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஆண்டு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்திருக்கிறது.
3. கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் - எழுத்தாளர்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை தலைவராக பணியாற்றியவர். சிறிதா முத்துக்கள், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி போன்ற சிறந்த படைப்புகளை உருவாக்கிய சிற்பி பாலசுப்பிரமணியம் 2 முறை சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். மேலும் பாரதிதாசன் விருது, தமிழ்நாடு அரசு விருது போன்ற பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
4. சவுக்கார் ஜானகி - பழம்பெரும் நடிகை
தமிழ், கன்னடம், தெலுங்கு என 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் பழம்பெரும் நடிகை சவுக்கார் ஜானகி. ஆரம்ப காலக்கட்டத்தில் 'ஆகாசவாணி மெட்ராஸில்' வானொலி கலைஞராக இருந்த ஜானகி 1950 இல் 'சவுகாரு'என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகே அவருக்கு 'சவுக்கார்' என்ற பெயர் கிடைத்தது. 91 வயதாகும் சவுக்கார் ஜானகி தற்போதும் சினிமாவில் நடித்து அசத்தி வருகிறார்.
5. பல்லேஷ் பதந்திரி - கலை
உலகில் சிறந்த செனாய் இசைக்கலைஞர்களுள் ஒருவர் பல்லேஷ் பஜந்திரி . கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட வர், தமிழத்தின் கலைமாமணி விருது மற்றும் கர்நாடகவின் கலாஸ்ரீ உள்ளிட்ட மாநிலங்களின் கலைக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.
6. எஸ். தமோதரன் - சமூக செயற்பாட்டாளர்
திருச்சி மாவட்டம் உறையூரைச் சேர்ந்த தாமோதரன் கல்லூரி படிப்பை முடித்த பிறகு, அந்தியோதயா என்றும் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றினார். சுமார் 3 ஆண்டுகள் அங்கு பணிபுரிந்த அவர், அங்கு ஆற்றிய களப் பணியின் பலனாக 1987ல் புதிய தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். நண்பர்களுடன் சேர்ந்து 'கிராமாலயா' எனும் தொண்டு நிறுவனத்தை தொடங்கி பல்வேறு சுகாதாரத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
7. வீராசாமி சேஷய்யா - மருத்துவம்
சென்னையை சேர்ந்த இவர் 1957ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., முடித்து, இந்திய ராணுவத்தில் மருத்துவ சேவையாற்றினார். இந்திய ராணுவத்தில் மருத்துவ துறை கேப்டனாக இருந்த சேஷய்யா, 1962ல் இந்திய சீன போர் , 1965ல் இந்தியா - பாகிஸ்தான் போர்களின் போது சேவையாற்றினார். நீரிழிவு நோய்க்கான மருத்துவராக விளங்கி வரும் இவர் பி.சி.ராய் விருது, சமர் சேவா ஸ்டார் 1965, சைன்யா சேவா பதக்கம், சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு சார்பிலான வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த தவில் வித்வான் கொங்கம்பட்டு முருகையன்(58) என்பவருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தவில் வித்வான் பத்மஸ்ரீ விருது பெற்ற வளையப்பட்டி சுப்ரமணியனின் முதல் சீடராவர். இவர் ஏற்கனவே கடந்த 2005ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். இதேபோல் , தமிழகத்தின் மோகனூரில் பிறந்து இந்தியாவின் டாப் நிறுவனமான டாடா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள நடராஜன் சந்திரசேகரனுக்கும், சென்னையில் பிறந்து உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுளில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியும் சுந்தர் பிச்சைக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.