சர்வாதிகாரிகள், கொலைகாரர்களுக்கு சீனா நிதி வழங்கும் – ஜெர்மனி கடற்படை தளபதி
25 Jan,2022
நாடுகளிலுள்ள வளங்களை கையகப்படுத்தும் வரை சீனா, அந்தந்த நாடுகளின் சர்வாதிகாரிகள் மற்றும் கொலைகாரர்களுக்கும் நிதி வழங்குவதாக ஜெர்மனிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கை அகிம் ஸ்கோன்பெக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது நேற்று முன்தினம் (21) அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த உரையின் போது உக்ரைன் தொடர்பிலும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வௌியிட்டார்.
நேட்டோ அமைப்பில் இணைந்துகொள்வதற்கான தகைமைகளை உக்ரைன் பூர்த்தி செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு மரியாதை மாத்திரமே வேண்டுமெனவும் ஜெர்மனிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கை அகிம் ஸ்கோன்பெக் கூறியுள்ளார்.
சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை ரஷ்யா கொண்டிருக்க வேண்டுமென்பதே பல நாடுகளின் விருப்பம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா விரும்புவதாக தெரிவிக்கப்படும் கருத்து முட்டாள்தனமானது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்து வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து ஜெர்மனிய கடற்படைத் தளபதி தமது பதவியை இராஜினாமா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.