4 கோடி இந்தியர்களை வறுமையில் தள்ளிய மத்திய அரசு: ராகுல் சாடல்!
24 Jan,2022
மத்திய அரசின் தவறான பொருளாதார செயல்பாடுகளால்தான் இந்தியாவில் 4 கோடி மக்கள் வருமை நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ஆக்ஸ்ஃபாம் அறிக்கையை மேற்கோள் காட்டிப் பதிவிட்டிருக்கிறார். ``இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு 4 கோடி மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதே சமயம் இரண்டு பெரிய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், `நல்ல நேரம் வரப்போகிறது என்று கூறி ஆட்சியைப் பிடித்தவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? இருவருக்கு மட்டுமே நலன் என்ற கொள்கையை பின்பற்றி நம் சகோதர, சகோதரிகளில் 4 கோடி பேரை வறுமைக்கு தள்ளியிருக்கின்றனர். 4 கோடி என்பது வெறும் எண் இல்லை. 4 கோடி பேரும் இந்தியர்கள். மத்திய அரசின் தவறான பொருளாதார செயல்பாடுகளால்தான் இந்தியாவில் 4 கோடி மக்கள் வருமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்" என மத்திய அரசை கடுமையாச் சாடியிருக்கிறார்.