தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது
23 Jan,2022
சென்னை-தமிழகம் முழுதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுஉள்ளது.தமிழகத்தில் கோவிட் பரவலை தடுக்க, வரும் 31ம் தேதி வரை, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வார நாட்களில் இரவு 10:00 முதல் காலை 5:00 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.இதுதவிர, ஞாயிற்றுக் கிழமைதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், இன்று மாநிலம் முழுதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.உணவகங்களில், 'பார்சல்' சேவை மட்டும் காலை 7:00 முதல் இரவு 10:00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு 'டெலிவரி' செய்யும் மின் வணிக நிறுவனங்கள், அந்த நேரத்தில் செயல்படலாம். அதேபோல, உணவகங்களும் உணவு டெலிவரி செய்யலாம்.இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்.
வெளியூர்களில் இருந்து வரும் பயணியர் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் போன்ற இடங்களில், வழக்கமான ஆட்டோக்கள், முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள், பயணி யரை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட ரயில் நிலையங்களுக்கும், வெளியூர் பஸ் நிலையங்களுக்கும் இது பொருந்தும் என, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.