பேரறிவாளனுக்கு மீண்டும் ஒருமாதம் பரோலை நீட்டித்தது தமிழக அரசு..!
22 Jan,2022
பேரறிவாளனின் பரோல் நாளை மறுநாள் முடிவடையும் நிலையில் மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை கைதியாக உள்ள பேரறிவாளனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டும் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் 2021 மே 18 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் (M.K.Stalin) கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, மே 28 ஆம் தேதி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளித்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து பேரறிவாளனுக்கு தமிழக அரசு பரோலை நீட்டித்து வருகிறது. மேலும் பரோலில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் நீரிழிவு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக கிருஷ்ணகிரி, விழுப்புரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பேரறிவாளனின் பரோல் (Perarivalan Parole) நாளை மறுநாள் (24.01.2022) முடிவடையும் நிலையில், 8-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. இதேபோல், இதே வழக்கில் சிறைக்கைதியாக இருந்த நளினியும் பரோலில் வெளியே இருக்கிறார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் இவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் தமிழக ஆளுநரிடம் உள்ளது. இதுகுறித்து அவர் இன்னும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த தீர்மானத்தின் மீது முடிவெடுக்குமாறு ஆளும் திமுக அரசும், எதிர்கட்சியான அதிமுகவும் ஆளுநரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.