உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி அருகே 251 மீட்டர் உயர ராமர் சிலை அமைப்பதற்காக தங்கள் நிலங்களை அரசு பலவந்தமாகப் பறிப்பதாக விவசாயிகள் புகார் கூறுகிறார்கள்.
அயோத்தியில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து மாஞ்சா பர்ஹட்டா. இந்த கிராம பஞ்சாயத்தில் 251 மீட்டர் உயரத்தில் ராமர் சிலை அமைக்கப்போவதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. சிலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. ஆனால், தங்களது நிலங்களை அரசு வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதாக கிராம மக்கள் கொந்தளிக்கிறார்கள்.
2021 டிசம்பர் 1 ஆம் தேதி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் மகரிஷி வேத விஞ்ஞான வித்யாபீடத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அன்று மாஞ்சா பர்ஹட்டா கிராம பஞ்சாயத்தில் வசிக்கும் அரவிந்த் குமார் யாதவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அரவிந்த் குமார் ஒரு விவசாயி.
வீட்டின் அருகே உள்ள வயல்களை உழ வேண்டும் என்று அன்றைய தினம் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்ததாக அரவிந்த் குமார் கூறுகிறார். போலீசார் அனுமதி வழங்கியதையடுத்து, டிராக்டர் மூலம் வயல்களை உழ ஆரம்பித்தார்.அப்போது வயல் வரப்பில் அமர்ந்து இரண்டு போலீசார் அவரை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
நாலாபுறமும் கரும்பு பயிர் செழித்து வளர்ந்திருந்தது. நடுவில் உள்ள வயல்களில் நெல் அறுவடை ஆனபிறகு அடுத்த பயிரை விதைக்க நிலம் தயார் செய்யப்பட்டுவந்தது. மாஞ்சா பர்ஹட்டாவின் மண் வளமானது, தண்ணீருக்கு பஞ்சமில்லை. அதனால்தான் இங்குள்ள விவசாயிகள் ஒரே பருவத்தில் பல பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.
மாலை நான்கு மணி அளவில் போலீஸ்காரர்கள் இருவரும் 'போய் வருகிறோம்' என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டனர் என்று அரவிந்த் குமார் தெரிவித்தார்.
அரவிந்த் குமார், உழவுவேலையை முடித்து டிராக்டரை நிறுத்தினார். துணியால் தன் மீதிருந்த மண்ணை தட்டியவாறு வயலில் வெறுங்காலுடன் நடந்து சென்றபோது இவ்வாறு கூறினார். "பாருங்கள், என் அப்பாவும் தாத்தாவும் விவசாயம் செய்த அருமையான நிலம் இது. எங்களுடைய முன்னோர்கள் எல்லாருமே இங்கே வசித்து விவசாயம் செய்தவர்கள். அரசு எங்களை இங்கிருந்து வெளியேற்ற நினைக்கிறது. மேலும் நான் இந்த விஷயங்களை அரசிடம் சொல்லக்கூடாது என்பதற்காக முதல்வர் (யோகி ஆதித்யநாத்) இங்கு வரும்போதெல்லாம், நான் வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறேன்."
ராமர் சிலை
இந்த நிலத்தை அரசு ஏன் வாங்க விரும்புகிறது என்று கேட்டபோது,"யோகி அவர்கள் இங்கு உலகின் மிகப்பெரிய சிலையை நிறுவ விரும்புகிறார். ராமர் சிலை 251 மீட்டர் உயரத்தில் இருக்கும்," என்றார்.
2019 நவம்பர் 9 ஆம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த முடிவிற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 2020 ஜனவரி 14 அன்று அயோத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டது.
ராமர் சிலை செய்வதற்காக மாஞ்சா பர்ஹட்டா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட நியூர் கா புர்வா, பன்வாரி புர்வா, சோட்டி முஜ்ஹானியா, படி முஜ்ஹானியா, தர்மு கா புர்வா, கலே கா புர்வா மற்றும் மதர்ஹியா ஆகிய கிராமங்களில் 85.977 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த அரசு விரும்புகிறது என்று அந்த அறிவிக்கை தெரிவித்தது. இந்த கிராம பஞ்சாயத்தில் சுமார் 350 குடும்பங்கள் உள்ளன மற்றும் மக்கள் தொகை சுமார் மூவாயிரம்.
"இந்த அறிவிப்பால் கிராம மக்கள் அனைவரும் கொதிப்படைந்தோம். நாங்கள் விவசாயிகள். விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்த்து வாழ்க்கை நடத்துகிறோம். எங்கள் நிலத்தை அரசு எடுத்துக்கொண்டால் நாங்கள் எங்கு செல்வோம்? சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச முயற்சித்தோம். ஆனால் எங்களுக்கு எங்கிருந்தும் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. மாறாக அரசும் நிர்வாகமும் நிலம் கையகப்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு எங்களை வற்புறுத்தத் தொடங்கியது. அதன் பிறகு 2020 பிப்ரவரி 28 அன்று உயர் நீதிமன்றத்தை அணுக நாங்கள் முடிவு செய்தோம்," என்று இது குறித்து அரவிந்த் குமார் குறிப்பிட்டார்.
"நாங்கள் பல தலைமுறைகளாக மாஞ்சா பர்ஹட்டாவில் வசித்து வருகிறோம் என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தோம். சுதந்திரத்திற்கு முன்பில் இருந்தே நாங்கள் ஜமீன்தார்களின் நிலங்களில் குடிமக்கள்போல இருந்து வருகிறோம். ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யப்படாத காரணத்தால் கிராமவாசிகளின் மக்கள் தொகையை பதிவு செய்ய முடியவில்லை.
1992 ஆம் ஆண்டு, மகரிஷி ராமாயணவித்யாபீட அறக்கட்டளை, ராமாயண பல்கலைக்கழகம் அமைப்பதற்காக மாஞ்சா பர்ஹட்டா விவசாயிகளிடமிருந்து நிறைய நிலத்தை வாங்கியது. எங்கள் பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் நிலத்தை அறக்கட்டளைக்கு விற்றனர். ஆனால் அறக்கட்டளை எந்த பல்கலைக்கழகத்தையும் கட்டவில்லை. நிலத்தை கையகப்படுத்தவும் இல்லை. 1984 முதல் நில அளவிடலோ, ஒருங்கிணைக்கும் பணியோ நடைபெறாததால், எங்களின் எந்த நிலம் அறக்கட்டளையிடம் உள்ளது, எங்கிருந்து எங்கு வரை நிலம் உள்ளது, சாலை எங்கே இருக்கிறது, வடிகால் எங்கிருந்து செல்லும் என்று எங்களுக்கு தெரியவில்லை. இதற்குள்ளாக இந்த கிராமத்தில் மக்கள் தொகையும் அதிகரித்து, மக்கள் வீடுகளையும் கட்டிக்கொண்டுள்ளனர். 2013 ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை பின்பற்றி சர்வே செட்டில்மென்ட் செய்து நிலத்தை கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
விவசாயிகள் தரப்பு வாதத்தை கேட்ட உயர்நீதிமன்றம் 2020 ஜூன் 16 அன்று பின்வரும் உத்தரவை பிறப்பித்தது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் (2013) கீழ் நில அளவிடல் வேலைகளை நடத்தி விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓராண்டு கடந்த பிறகும் நிர்வாகம் விவசாயிகளின் சம்மதத்தை பெறவில்லை, இழப்பீடு குறித்து எந்த பேச்சும் நடத்தவில்லை, நில அளவையும் செய்யவில்லை என்று அரவிந்த் கூறுகிறார். மாறாக, நிர்வாகம் கிராம மக்களை பல்வேறு வழிகளில் சித்திரவதை செய்யத் தொடங்கியது. பெயரிடப்பட்ட15 பேர் மற்றும் தெரியாத 200 பேர் மீது, IPC 188 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தன் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டதாக அரவிந்த் குமார் யாதவ் கூறுகிறார். நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கால் மன உளைச்சலுக்கு ஆளான கிராம மக்கள் மீண்டும் உயர்நீதிமன்றத்தின் கதவைத் தட்டினர். 2021 ஜூலை 5 அன்று, நீதிமன்றத்தை அவமதித்ததற்காக நிர்வாகத்திற்கு காரணம் கேட்கும் நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், 2022 பிப்ரவரி மாததிற்குள் நில ஆய்வு நடத்த காலகெடுவை விதித்தது.
"ஆமாம், உயர்நீதிமன்றம் பிப்ரவரி 2022 வரை கால கெடு விதித்துள்ளது. அதனால் என்ன ? நாங்கள் நீதிமன்றத்திடம் மேலும் ஓராண்டு கால அவகாசம் கேட்போம். இந்த எல்லா வேலைகளுக்கும் நேரம் எடுக்கும், " என்று ஒரு கோப்பை மூடியவாறு உதவி பதிவு அதிகாரி (ஏஆர்ஓ) பான் சிங் கூறினார்.
1984ல் இருந்து சர்வே செட்டில்மென்ட் நடக்கிறது. 35 ஆண்டுகளாகியும் ஒரு கிராம பஞ்சாயத்தின் சர்வே செட்டில்மென்ட் கூட முடிக்கப்படவில்லையா?' என்ற கேள்விக்கு பதிலளித்த பான் சிங்," இதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று மக்களுக்கு தெரியவில்லை. உண்மையில், மகரிஷி மகேஷ் யோகியின் அறக்கட்டளை, வீட்டுவசதி மேம்பாட்டு சபைக்கு நிலம் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. வீட்டு வசதி அமைப்பு நிலத்தை கையகப்படுத்தும் போது, நிலத்தை விட்டு வெளியேற அவர்கள் தயாராக இல்லை," என்று கூறினார்.
ஆனால் வீட்டு வசதி மேம்பாட்டு சபை சர்வே செட்டில்மென்ட் இல்லாமல் எப்படி நிலத்தை கையகப்படுத்துகிறது என்று கேட்டதற்கு, "அதை நீங்கள் வீட்டு வசதி மேம்பாட்டு சபையிடம்தான் கேட்கவேண்டும். அது அவர்கள் வேலை" என்று ஆவேசத்துடன் கூறினார்.
அயோத்தி வீட்டுவசதி மேம்பாட்டு சபைக்கு நிலம் கையகப்படுத்தும் பொறுப்பை அரசு வழங்கியுள்ளது.
மாஞ்சா பர்ஹட்டா பகுதியில் (சிலை நிறுவ) கையகப்படுத்தப்படும் நிலத்தில் 70 சதவிகிதம் மகரிஷி ராமாயண வித்யாபீட அறக்கட்டளையின் பெயரில் உள்ளது. இந்த அறக்கட்டளை 56.82 ஹெக்டேர் நிலத்தை மாநில அரசுக்கு வழங்க வீட்டு வசதி மேம்பாட்டு சபையின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
"மாஞ்சா பர்ஹட்டாவில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கிராம மக்கள் தங்கள் நிலங்களை தாமாக முன்வந்து வழங்குகின்றனர். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை," என்று வீட்டு வசதி மேம்பாட்டு சபையின் நிர்வாக பொறியாளர் ஓம் பிரகாஷ் பாண்டே, தொலைபேசியில், தெரிவித்தார்.
வீட்டு வசதி மேம்பாட்டு சபை அலுவலகத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த வீட்டுவசதித் துறை தாசில்தார் பிரவீன்குமார், விவசாயிகள் அனைவரும் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தங்கள் நிலத்தை வழங்குவதாகவும், யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.
சர்வே செட்டில்மென்ட் இல்லாமல் எப்படி நிலம் கையகப்படுத்தப்படும்? யாருடைய நிலம் எந்த அளவுக்கு இருக்கிறது, யாருடைய வீடு எந்த எண்ணில் இருக்கிறது என்பதை நிர்வாகம் எப்படி முடிவு செய்யும்? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரவீன்குமார், "சர்வேயில் செட்டில்மென்ட் ஏற்படவில்லை என்றால், வரைபடத்தின் அடிப்படையில் கையகப்படுத்துதல் மேற்கொள்ளப்படும்" என்கிறார்.
மகரிஷி ராமாயண வித்யாபீடம் அறக்கட்டளை ராமாயண பல்கலைக்கழகம் கட்ட நிலம் வாங்கியது. ஆனால் அது உடனடியாக கையகப்படுத்தப்படவில்லை கூடவே பல்கலைக்கழகமும் கட்டப்படவில்லை.
'புதிய அயோத்தி திட்டம்'
"புதிய அயோத்தியை அமைப்பதுதான் மகரிஷியின் திட்டம். பெரிய நிலங்கள் எங்கள் வசம்தான் உள்ளன. ஆனால் சில சிறிய நிலங்கள் எங்கள் வசம் இல்லை. பலமுறை விண்ணப்பித்தோம். சில சமயங்களில் போலீஸ் எங்களுடன் வந்து எங்களுக்கு ஆதரவாகவும், சில சமயங்களில் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு ஆதரவாகவும் பேசும். நல்ல விலை கொடுத்து நாங்கள் நிலத்தை வாங்கியிருந்தோம். காசோலை மூலம் தொகையை கொடுத்திருந்தோம். இப்போது நிலத்தின் மதிப்பு அதிகரித்ததால் கிராம மக்களின் எண்ணம் மாறிவிட்டது,"என்று மகரிஷி ராமாயண வித்யாபீட அறக்கட்டளையின் அறங்காவலர் சாலிக் ராம் மிஷ்ரா கூறினார்.
மாஞ்சா பர்ஹட்டா கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான ராம் அவத் யாதவ் இவை அனைத்தும் தன் கண் முன்னால் நடந்த விஷயங்கள் என்று கூறுகிறார். கிராமத்தின் சுற்றுவட்டாரத்தில் பள்ளிக்கூடம் இல்லாததாலும், தங்கள் குழந்தைகள் பள்ளியில் படித்து முன்னேற வேண்டும் என்று பலர் நினைத்ததாலும் பள்ளி கட்டுவதற்காக மகரிஷி மகேஷ் யோகியின் அறக்கட்டளைக்கு மக்கள் நிலத்தை விற்றனர். ஆனால் 30 ஆண்டுகள் ஆகியும், கிராமத்தில் பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை.
ராம் அவத் தனது பேச்சை முடிப்பதற்குள், 37 வயதான ராமசந்திர யாதவ் பேசத் தொடங்கினார். "நிர்வாகம் எங்களை எல்லா வகையிலும் துன்புறுத்துகிறது. என் மனைவி இந்த கிராமத்தின் தலைவர். பிடிஓ (வட்டார வளர்ச்சி அதிகாரி) மூலம் , சில நேரங்களில் செயலர் மூலம் நான் பல முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். மேலும் கிராம மக்களிடம் நில ஒப்புதலைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன். கட்டாயத்தின் பேரில் நான் எனது சம்மதத்தை வழங்க வேண்டியிருந்தது. நெருக்குதல் அளிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது."என்றார் அவர்.
உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஓம்கார் நாத் திவாரி, கிராம மக்களிடம் அரசு சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிக்கிறது என்று குறிப்பிட்டார்.
"விவசாயிகள் தங்கள் நிலங்களை சுய சம்மதத்துடன் தருவதாகச் சொல்கிறார்கள், ஆனால் நிர்வாகம் கிராம மக்களை பல்வேறு வழிகளில் சித்திரவதை செய்து சம்மதம் வாங்குகிறது என்பதே உண்மை. ஊர்க்காவலரிடம் கமாண்டன்ட், டிஸ்மிஸ் உத்தரவை காட்டுகிறார். நீ நாளை முதல் வேலைக்கு செல்லவேண்டாம், நீ டிஸ்மிஸ் செய்யப்பட்டுவிட்டாய் என்று அவரிடம் சொல்லப்படுகிறது. அவர் தனது குடும்பத்திற்கு உணவளித்தாக வேண்டும். எனவே வேறு வழியில்லாமல் என் நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அவர் சொல்கிறார்.
சஸ்பெண்ட் செய்யப்பட இருப்பதாக ப்யூன் மிரட்டப்படுகிறார். கணக்காயர், அதிகாரியின் மிரட்டலுக்கு உள்ளாகிறார். இப்போது வேலை செய்யவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பவர், பிள்ளைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக வேறுவழி தெரியாமல் சம்மதம் தெரிவிக்கிறார். அரசு நிலத்தில் ஒரு அங்குலத்தை ஆக்கிரமித்திருந்தாலும் கூட கட்டடம் முழுவதையும் இடிப்போம் என்று அரசு கூறுகிறது. நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமானால் நில விற்பனைக்கு ஒப்புக்கொள்ளுங்கள் என்று கூறி அரசு அதிகாரிகள் சம்மதம் பெறுகின்றனர்."
நான்கு மடங்கு இழப்பீடு வழங்க அரசு சம்மதித்துள்ள நிலையில் ஏன் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்த வழக்கறிஞர் ஓம்கார்நாத் திவாரி, "அரசு நான்கு மடங்கு இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டது. ஆனால் 2017 ஆம் ஆண்டிலிருந்து நிலத்தின் சர்க்கிள் ரேட் அதிகரிக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் அதிகரிக்க வேண்டும். அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டால் இது அவசியம். 2013 ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க அதிக செலவாகும் என்பதால் இதைசெய்ய அரசு தயங்குகிறது. அதனால் விவசாயிகள் சுய சம்மதத்துடன் நிலத்தை தருகிறார்கள் என்று அரசும் நிர்வாகம் கூறுகிறது. ஆனால் சம்மதம் எப்படி பெறப்படுகிறது என்று நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்," என்று கூறினார்.
செயல்முறை எளிதானது அல்ல
"2013 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் நிலத்தை கையகப்படுத்த நில உரிமையாளர்களின் ஒப்புதலைப் பெறுவது, சமூக பாதிப்பை மதிப்பிடுவது மற்றும் புனரமைப்பு ஏற்பாடு செய்வது எளிதான செயல் அல்ல. கையகப்படுத்தும் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசுகள் சட்டத்தை முறையாக பின்பற்றுவதில்லை," என்று தரவு ஆராய்ச்சி நிறுவனமான லேண்ட் கான்ஃப்ளிக்ட் வாட்சின் லீகல் அசோசியேட் முக்தா ஜோஷி கூறினார்.
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகளில் 35%க்கும் அதிகமானவை சர்ச்சைக்குரியவை என்பதை 'லேண்ட் கான்ஃப்ளிக்ட் வாட்சின்' தரவு காட்டுகிறது. உரிய இழப்பீடு வழங்காதது, வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது, மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்யாமல் இருப்பது வாடிக்கையாகிவிட்டது.
கிராம மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை நம்பி வாழ்கின்றனர். இந்த நிலையில் தங்கள் நிலத்தை அளித்துவிட்டால் அதற்கு ஈடாக அரசு தங்கள் எதிர்காலத்தை எவ்வாறு பாதுகாக்கும் என்பது அவர்களின் கவலையாக உள்ளது. நிலத்திற்கு பதிலாக நிலம் கொடுப்பார்களா அல்லது குடும்ப உறுப்பினருக்கு வேலை அளிப்பார்களா?
இது குறித்து அரசு மற்றும் நிர்வாகத்திடம் இருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கிடைக்காததால் கிராம மக்கள் கவலையடைந்துள்ளனர். "எங்கள் நிலங்கள் போய்விட்டால் நாங்கள் என்ன செய்வோம், நாங்கள் எங்கு வாழ்வோம், அரசை எதிர்த்து வழக்கு தொடுக்கவும் முடியாது. வற்புறுத்தவும் முடியாது. ஐயா, எங்களையெல்லாம் இங்கேயே புதைத்துவிட்டு எங்கள் நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்," என்று 60 வயதான ராம் பகதூர் குரல் தழுதழுக்க கூறுகிறார்.