கோதுமைக்கு அதிக மானியம் இந்தியாவுக்கு கடும் எதிர்ப்பு
22 Jan,2022
கோதுமைக்கு அதிக மானியம் அளிக்கும் இந்தியாவுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் வழக்கு தொடர, மூத்த அமெரிக்க எம்.பி.,க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உலக வர்த்தக அமைப்பின் விதிகளின்படி, அதன் உறுப்பு நாடுகளில் விவசாய மானியம் 10 சதவீதத்திற்கு மேல் தாண்டக்கூடாது. இந்தியாவில் கோதுமைக்கு அதிக மானியம் வழங்கப்படுவதாக கூறி, அமெரிக்க கோதுமை விவசாய சங்கங்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் முறையிடக் கோரி, அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தை எம்.பி.,க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து அமெரிக்க பார்லிமென்ட் எம்.பி.,க்கள் 28 பேர், அமெரிக்க வர்த்தக அமைச்சர் காத்தரின் டாய் மற்றும் வேளாண் அமைச்சர் டாம் வில்சாக் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவில் கோதுமையை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அளவுக்கு அதிகமாக மானியம் வழங்கப்படுகிறது.
உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறி 10 சதவீதத்திற்கும் அதிகமாக மானியம் வழங்கப் படுவது, சர்வதேச வேளாண் சந்தையில் பாதகமாக அமைந்து விடும்.இந்த விவகாரத்தில், உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும். இதில், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.