சேலத்தில் கைதான மாற்றுத்திறனாளி உயிரிழப்பு - 3 போலீசார் பணியிடை நீக்கம்
17 Jan,2022
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரபாகரன், கடந்த 12ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார்.Image caption: தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரபாகரன், கடந்த 12ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பிரபாகரன். இவரது மனைவி ஹம்சலா. இருவரையும் கடந்த 8ம் தேதி திருட்டு வழக்கு விசாரணைக்காக நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் இருவரையும் கைது செய்து, பிரபாகரனை நாமக்கல் கிளை சிறையிலும் ஹம்சலாவை சேலம் மத்திய பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.
கடந்த 12 ம் தேதி காலை திடீரென பிரபாகரனின் உடல் நிலை மோசமானதை அடுத்து அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரபாகரன், கடந்த 12ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார்.
பிரபாகரனின் மனைவி ஹம்சலா கூறுகையில், ''என்னையும் என் கணவரையும் போலீஸ்காரங்க கூட்டிகிட்டு போயி, அடிச்சு சித்ரவதை பண்ணி ஆபாசமா திட்டினாங்க .கடைசியில கொன்னுட்டாங்க. என் பிள்ளைகள் இரண்டும் அனாதையாக நிற்கிறார்கள். என் கணவன் உயிரோட வேண்டும். இல்லன்னா கொன்னவங்களுக்கு தண்டனை கிடைக்கனும்.'' என்றார்.
இந்தநிலையில், சேந்தமங்கலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் சந்திரன், பூங்கொடி , தலைமை காவலர் குழந்தைவேலு ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து சேலம் சரக பொறுப்பு டிஐஜி நஜ்மல் ஹோதா உத்தரவிட்டுள்ளார்.