சட்டவிரோதமாக இயங்கி வந்த ஆயுத தொழிற்சாலை - 6 பேரை கைது செய்து காவல்துறை
13 Jan,2022
உத்தரப்பிரதேச மாநிலம் கோசிகாலன் காவல்துறையினக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் ஷாபூர் கிராமத்திற்கு அருகே யமுனை பள்ளத்தாக்கு பகுதியில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை ஒன்று இயங்கி வருவது கண்டறியப்பட்டது.
அந்த தொழிற்சாலையில் 25 நாட்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு துப்பாக்கிகள், 50 க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் இருந்ததாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் கௌரவ் குரோவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான பல்வேறு கருவிகள் மற்றும் மூலப்பொருட்களையும் போலீசார் மீட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் மதுராவைச் சேர்ந்த முப்பா, ஆரிப், அன்சார், ஷாநவாஜ், கஞ்சர் உள்ளிட்டோர் அடையாளம் காணப்பட்டனர், அவர்கள் அனைவரையும் இங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.