தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
12 Jan,2022
காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இடங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக மொத்தம் ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் 2 ஆயிரத்து 145 கோடி ரூபாயும், மாநில அரசின் சார்பில் ஆயிரத்து 855 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் சுமார் 100 முதல் 150 மாணவர் வரை மொத்தம் 1,450 மாணவர்கள் கூடுதலாக மருத்துவ கல்வி படிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி விருதுநகரில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் நேரில் பங்கேற்று தொடங்கி வைப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில், குறிப்பிட்ட நாளில் டெல்லியில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும் அவர் திறந்துவைப்பார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று மாலை டெல்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி 11 புதிய மருத்துவக்கல்லூரி கட்டிடங்களையும் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.