இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென உயர்ந்து வருகிறது. இதன்படி, 1 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கை இன்று பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதனை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பாதிப்பு பல நாடுகளில் பரவி வருகிறது. இவற்றில் இந்தியாவும் அடங்கும். இதனால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்கி உள்ளது.
இதன்படி, அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் 7 நாட்கள் வீட்டு தனிமை கட்டாயம் என மத்திய
அரசு புதிய உத்தரவு ஒன்றை இன்று பிறப்பித்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
இதேபோன்று, இந்தியாவுக்கு வருகை தரும் ஆபத்து நிலையிலான நாடுகள் பற்றிய பட்டியலை அரசு வெளியிட்டு உள்ளது. இந்த நாடுகளை சேர்ந்த பயணிகள், இந்தியாவுக்கு வந்த பின்னர் மேற்கொள்ளும் பரிசோதனை உள்பட கூடுதல் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வருகிற 11ந்தேதி முதல் அடுத்த உத்தரவு வரும்வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அதிர்ச்சியூட்டும் தொற்று உயர்வு: 9,000 நெருங்கியது கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் 1,36,620 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,981 ஆக உள்ளது. தமிழகத்தில் 8,944 வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 37 பேர் என 8,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினசரி எண்ணிக்கையில் ஒரே நாளில் 2,000 ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு உள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,759 ஆக இருந்த நிலையில் 772 அதிகரித்து 4,531 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் ஒரே நாளில் 700க்கும் மேல் கொரோனா அதிகரித்துள்ளது.
கொரோனாவால் மேலும் 8 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,833 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 30,817 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து மேலும் 984 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 27,08,763 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக கொரோனா பாதித்த மாவட்டங்கள்,
செங்கல்பட்டில் 816 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,039 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் 309 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 408 ஆக அதிகரித்துள்ளது. வேலூரில் 223 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 189 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் புதிய ஒமைக்ரான் பாதிப்பு இல்லை - மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 121 ஆக உள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரில் 4 பேர் கேரளா, புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களை சேர்ந்தவர்களாவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.