சிறையில் சித்ரவதை.. போலீஸிடம் வசூலித்து இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு!
05 Jan,2022
சிறையில் வைத்து சித்ரவதை செய்யப்பட்ட தொழிலதிபருக்கு 11 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.
காவல்துறையினரால் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டு, துன்புறுத்தலுக்கு ஆளான ஒசூர் தொழிலதிபருக்கு 11 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ள மாநில மனித உரிமை ஆணையம், தாக்குதலில் ஈடுபட்ட காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் விதயரன்யா என்பவர் கணினி உதிரிபாகங்கள் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் ஸ்வப்னா ரெட்டி என்ற பெண்ணுக்கும் இடையில் தொழில் ரீதியாக பணத்தகராறு இருந்துள்ளது.
இது தொடர்பாக ஸ்வப்னா ரெட்டி கொடுத்த புகாரில் அவரிடம் பணம் வாங்கிக்கொண்டு கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள் ஒசூர் ஹுட்கோ காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், ஒசூர் சிட்கோ காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர், தன்னை சட்டவிரோதமாக காவலில் வைத்து சித்ரவதை செய்தது கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதற்கு உதவி ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் காவலர்கள் மாதேஷ், தனபால் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறி விதயரன்யா மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ், காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் கூறி, பாதிக்கப்பட்ட விதயரன்யாவுக்கு 11 லட்சம் ரூபாயை இழப்பீடாக 8 வாரத்திற்குள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்
இழப்பீடு தொகை 11 லட்சம் ரூபாயில், 4 லட்சம் ரூபாயை காவல் ஆய்வாளர் சரவணனிடமும், 5 லட்சம் ரூபாயை உதவி ஆய்வாளர் சுரேஷிடமும், 2 லட்சத்தை உதவி ஆய்வாளர் பார்த்திபனிடமும் வசூலித்துக்கொள்ளவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துமீறும் காவல்துறையினருக்கு பாடம் கற்பிக்கும் வகையில், ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட 5 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள ஆணையம், இந்த 5 பேரையும் மேற்கொண்டு சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியமர்த்த கூடாதென தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர்கள் சுரேஷ் மற்றும் பார்த்திபன் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.