ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா கடனாக வழங்க வேண்டும்
02 Jan,2022
ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு உடனடியாக 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்குவதற்கு இந்தியா முன்வரவேண்டும்.
வெளிவிவகாரக்கொள்கையுடன் தொடர்புடைய பல்வேறு விவகாரங்களிலும் தோல்வியடைந்திருக்கும் மோடி அரசாங்கம், இலங்கை விவகாரத்திலும் தோல்வியடையக்கூடாது என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரும் மாநிலங்கள் அவை உறுப்பினருமானவாமி சுப்ரமணியன் சு தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி மேற்குறிப்பிட்டவாறு இலங்கைக்கான கடனை உடனடியாக ஒதுக்கீடு செய்வதன் மூலம் இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் ஓர் நீண்டகாலப்பங்காளியை இந்தியாவினால் பெற்றுக்கொள்ளமுடியும் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், அவ்வாறில்லாவிட்டால் சீனாவிற்கு மற்றுமொரு கனிஷ்ட பங்காளி கிடைப்பதை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷ அரசாங்கத்துடன் கடந்த காலங்களில் மிகநெருக்கமான உறவைப் பேணிவந்திருக்கக்கூடிய இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, இலங்கைக்கான கடன்வழங்கல் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியாவிற்கு இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் ஓர் நீண்டகாலப்பங்காளி அவசியமெனின், இப்போதே 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை ராஜபக்ஷ அரசாங்கத்திற்குக் கடனான வழங்குவதற்கென இந்தியா ஒதுக்கீடு செய்யவேண்டும்.
அல்லது சீனாவிற்கு மற்றுமொரு கனிஷ்ட பங்காளி கிடைப்பதை எதிர்கொள்ளவேண்டும். வெளிவிவகாரக்கொள்கை சார்ந்த பல்வேறு விடயங்களிலும் மோடி அரசாங்கம் தோல்வியடைந்திருக்கின்றது. எனவே அந்த வரிசையில் இலங்கையும் அடுத்ததாகச் சேர்ந்துகொள்வதற்கு இடமளிக்கக்கூடாது.
ரஷ்யாவினால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் பிரகாரம், கனிஷ்ட பங்காளியான புட்டினின் அனுசரணையுடன் மோடி வெகுவிரைவில் சி ஜின்பிங்கைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாக இலங்கைக்கான 10 பில்லியன் டொலர் கடன் வழங்கலை எமது அமைச்சர்கள் தொடர்ந்தும் இழுத்தடித்தால், அதன் அர்த்தம் நாம் முழுமையாக விற்பனை செய்யப்பட்டுவிட்டோம் என்பதேயாகும் என்றும் சுப்ரமணியன் சுவாமி அவரது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.