ரவுடிக்கு அடியாளாக மாறிய போலீஸ்.. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!
02 Jan,2022
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடியுடன் இணைந்து நிலத்தை அபகரிக்க முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
ரவுடியுடன் இணைந்து நிலத்தை அபகரிக்க முயன்ற போலீஸ்
பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை என காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே மதுரமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் பிரபல ரவுடி குணா.
பொது மக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்து கொலை கொள்ளை ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு தாதாவாக வலம் வரும் பிரபல ரவுடி குணா மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் சுங்குவார்சத்திரம் அருகே கீரநல்லுார் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்து நிலம் அபகரிப்பு செய்ய முயன்ற வழக்கில், அந்த பெண்மணி கொடுத்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் திருப்பெரும்புதூர் டிஎஸ்பி மணிகண்டன் மேற்பார்வையில் சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடந்த ஆண்டு குணா கைது செய்யப்பட்டார் .
அதன்பின், ஜாமினில் வெளிவந்து சில நாட்களாக தலைமறைவாக உள்ள குணாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கீரநல்லுார் நில அபகரிப்பு வழக்கில் குணாவுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி மதுரமங்கலத்தை சேர்ந்த வெங்கடேசன் என்ற போலீஸ்காரரை சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ரவுடிகள் மீது தொடர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதன் பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் மீது தொடர்ந்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் எவரேனும் பொதுமக்களுக்கும் அவர்களது சொத்துக்கும் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்தார்.