தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான்
01 Jan,2022
சென்னை ஈஞ்சம்பாக்கம் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 32 மாணவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவச உடை அணிந்து நேரில் சென்று நலம் விசாரித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த 34 மாணவர்களில் ஒரு மாணவி மட்டும் கிண்டி கிங் ஆஸ்பத்திரியிலும், மற்றொரு மாணவி தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 32 பேர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
74 பேருக்கு ஒமைக்ரான்
இந்த மாணவர்கள் சிகிச்சை மையத்திலேயே நேரத்தை வீணடிக்காமல் படித்து கொண்டிருக்கிறார்கள். டெல்டாவும், ஒமைக்ரானும் ஒன்றிணைந்து சுனாமி வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது எனவும், உலகை அச்சுறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 46 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று (நேற்று) மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூக பரவல் அடையாளம்
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாத 63 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பது, சமூக பரவலின் அடையாளமாக இருக்கிறது. இதுவரை 120 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.