ஏ.டி.எம். கட்டணம் இன்று முதல் உயருகிறது - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
01 Jan,2022
வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மூலம் மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி ஏ.டி.எம்.கள் மூலம் 3 முறையும் இலவசமாக பணம் எடுத்தல் உள்ளிட்ட பரிமாற்றங்களை (நிதி அல்லது நிதி சாரா பரிமாற்றங்கள்) செய்ய முடியும்.
அதற்கு மேல் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தவகையில் அனுமதிக்கப்பட்ட இலவச பரிமாற்றத்துக்கு அப்பால் நடைபெறும் பரிமாற்றங்களுக்கு ரூ.20 கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த கட்டணம் இன்று (சனிக்கிழமை) முதல் உயர்த்தப்படுகிறது. அதன்படி, ரூ.20-க்கு பதிலாக ரூ.21 ஆக இது அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. ஏ.டி.எம். பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட செலவினங்களுக்கான நிதி தேவை அதிகரித்து உள்ளதை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வை அமல்படுத்துவதாக ரிசர்வ் வங்கி ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.