ஐ.நா., பயங்கரவாத தடுப்பு குழு இந்தியாவுக்கு தலைமை பொறுப்பு
01 Jan,2022
இன்று முதல் ஓராண்டுக்கு ஐ.நா., பயங்கரவாத தடுப்பு குழு செயல் இயக்குனரகத்தின் தலைமை பொறுப்பை இந்தியா வகிக்க உள்ளது.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பயங்கரவாத தடுப்பு குழு செயல் இயக்குனரகத்தின் பதவி காலத்தை 2025 டிச., 31 வரை புதுப்பிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி கூறியதாவது:பயங்கரவாத தடுப்பு குழு செயல் இயக்குனரகத்தின் பதவி காலத்தை புதுப்பிக்கும் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா ஓட்டு போட்டது. இதைத் தொடர்ந்து ஜன., 1 முதல் இந்த இயக்குனரகத்தின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கும்.
உறுப்பு நாடுகளுடன் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிரான பணிகளை இந்தியா மேலும் வலுப்படுத்தும். பயங்கரவாத செயல்களை யார் செய்தாலும், அவை எங்கு நிகழ்த்தப் பட்டாலும், அதை நியாயப்படுத்தும் போக்கை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. பயங்கரவாத எதிர்ப்பு என்ற பொது நோக்கத்தில் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தவறினால் அமெரிக்க வர்த்தக கட்டட தகர்ப்புக்கு முன் இருந்தது போல, 'என் பயங்கரவாதி, உன் பயங்கரவாதி' என்ற பிரிவினை காலத்திற்கு உலகம் திரும்பி விடும்.இவ்வாறு அவர் கூறினார்.