அருணாச்சல பிரதேச பகுதிகளின் பெயரை மாற்றி சீனா அடாவடி: உண்மை மாறாது என இந்தியா பதிலடி
31 Dec,2021
புதுடில்லி: அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளின் பெயர்களை மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, கண்டுபிடிக்கப்பட்ட பெயர்கள் மூலம் உண்மை மாறிவிடாது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி எனக்கூறியுள்ளது.
நம் நாட்டின் அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது; அது, தெற்கு திபெத் என்றும், அதை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்றும் பல ஆண்டுகளாக சீனா புலம்பி வருகிறது. அருணாச்சலுக்கு நம் ஜனாதிபதி, பிரதமர் சென்றால் ஒப்பாரி வைப்பது சீனாவின் வழக்கம். அருணாச்சல பிரதேசத்தை சீனா எப்போதும் ஜாங்னான் என குறிப்பிட்டு வருகிறது. இந்நிலையில் அருணாச்சலில் உள்ள 15 இடங்களுக்கான பெயர்களை சீனா மாற்றிஉள்ளது. இதில் எட்டு நகரங்கள், நான்கு மலைகள், இரண்டு ஆறுகள், ஒரு கணவாய் ஆகியவை அடங்கும்.
இது தொடர்பாக நமது வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிநதம் பக்சி கூறியதாவது: அருணாச்சல பிரதேசத்தின் பெயர்களை மாற்றுவது போன்ற முயற்சிகளில் சீனா ஈடுபடுவது இது முதல்முறை அல்ல. கடந்த 2017 ஏப்ரலிலும் இதுபோன்று செய்துள்ளது. அருணாச்சல பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இது எதிர்காலத்திலும் தொடரும். அந்த மாநிலத்தில் உள்ள பகுதிகளுக்கு கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை சூட்டுவதன் மூலம், உண்மையை மாற்றிவிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.