வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இன்று (டிச.30) திடீரென கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்பதால் ஆரஞ்ச் 'அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று (டிச.30) வெளியிட்டிருப்பதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்தில் கன முதல் மிக கனமழை நீடிக்கும் . இம்மாவட்டங்களில் 6 செ.மீ, முதல் 12 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திடீரென கனமழை பெய்து வருகிறது. கடந்த 4 மணிநேரமாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் கடைகள், வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
இன்று (டிச.,30) மாலை 5:30 மணி நிலவரப்படி சென்னையில் எம்.ஆர்.சி., நகரில் 13 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 12 செ.மீ., ஒய்.எம்.சி.ஏ., நந்தனத்தில் 8 செ.மீ., மீனம்பாக்கம், ஏ.சி.எஸ் கல்லூரியில் தலா 5 செ.மீ., அண்ணா பல்கலையில் 4 செ.மீ., சத்யபாமா பல்கலை, ஹிந்துஸ்தான் பல்கலை, சிதம்பரத்தில் தலா 3 செ.மீ. பள்ளிக்கரணை, மாதவரத்தில் தலா ஒரு செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று (டிச.,30) கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (டிச.,31): கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜன.,01: கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணிநேரத்தில் மண்டபம் (ராமநாதபுரம்), புவனகிரி (கடலூர்) தலா ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது.