என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை வந்தாச்சு: சென்னையில் ஒழியுமா ரவுடிசம்?
30 Dec,2021
சென்னை, புறநகர் பகுதிகளில் நடக்கும் கட்ட பஞ்சாயத்துகளை தடுக்க என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்துகளை தடுக்க என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி வெள்ளத்துரை தலைமையில் காவல்துறை. சிறப்புப் படை அமைத்துள்ளது. இந்த சிறப்பு படை, கட்டப் பஞ்சாயத்துகளை கண்காணித்து தடுப்பது மட்டுமின்றி, தொழிற்சாலை பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை கண்காணிக்கவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு படைக்கு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏடிஎஸ்பி எஸ்.வெள்ளதுரை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று காவல்துறையில் அறியப்படுபவர். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு பிரபல ரவுடியான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) பணியாற்றி வந்த வெள்ளத்துரை கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை காவல்துறையில் கூடுதல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். அப்போது, இவருடன் ஏடிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள 15 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பொதுவாக எஸ்.பி வெள்ளத்துரை ஒரு மாவட்டத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டால் அம்மாவட்டத்தில் உள்ள ரவுடிகளுக்கு அதை விட கெட்ட செய்தி எதுவும் இருக்க முடியாது. மேலும், அதனை சாதாரண பணியிட மாற்றமாகவும் கருத முடியாது.
90களில் தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் நடந்த முக்கிய என்கவுண்டர் சம்பவங்களில் வெள்ளைதுரைக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அயோத்திக்குப்பம் வீரமணியை தொடர்ந்து, திருப்பாசேத்தியில் எஸ்ஐ ஆல்வின் சுதன் கொலை வழக்கில் கைதான ரவுடிகள் மற்றும் மதுரையில் சப்- இன்ஸ்பெக்டர்களை குத்திய ரவுடிகள் கவியரசு, முருகன் உள்ளிட்ட என்கவுண்டர் சம்பவங்களை வெள்ளத்துரை நடத்தியுள்ளார்.
மேலும், கடந்த 2004 ஆம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பனை என்கவுண்டர் செய்த தமிழக காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.