பெட்ரோலிய கிடங்கு குத்தகை ரத்து இந்தியாவுடன் இலங்கை அரசு பேச்சு
30 Dec,2021
இலங்கையின் திரிகோணமலையில் உள்ள 99 பெட்ரோலிய சேமிப்பு கிடங்குகளுக்கான குத்தகையை ரத்து செய்வது குறித்து இந்தியா இலங்கை இடையேயான பேச்சு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையின் கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள திரிகோணமலையில் இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேயர்கள் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை அமைத்துள்ளனர்.அதில் 99 சேமிப்பு கிடங்குகள் 2003ல் இந்தியாவுக்கு 35 ஆண்டு கால குத்தகைக்கு விடப்பட்டது.
இதற்காக ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய் குத்தகையாக வழங்கப்படுகிறது.ராணுவ ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துள்ள இந்தப் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்குகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இலங்கை பிரிவு குத்தகைக்கு எடுத்துள்ளது.
இந்தக் கிடங்குகளுக்கான குத்தகையை ரத்து செய்து மீண்டும் கையகப்படுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. கடந்த அக்.ல் இலங்கைக்கு பயணம் செய்த நம் வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் சிருங்கலா இது தொடர்பாக பேச்சு நடத்தினார்.
இந்நிலையில் கிடங்குகளை திரும்ப எடுத்துக் கொள்வது குறித்த பேச்சு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கையின் எரிசக்தி துறை அமைச்சர் உதயா காமன்பிலா கூறியுள்ளார்.