நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதி.!
29 Dec,2021
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந்தேதி முதன்முதலாக தென்பட்ட ஒமைக்ரான் வைரஸ், ஒரே மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் மின்னல் வேகத்தில் பயணித்திருக்கிறது. இந்தியாவில் கடந்த 2-ந்தேதி நுழைந்தது, இந்த வைரஸ்.
இந்த சூழலில் இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை தற்போது 781 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாக டெல்லியில் 238 பேருக்கும், மராட்டிய மாநிலத்தில் 167 பேரும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே 34 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ள நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கு இந்த தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் கொரோனா தோற்றும் சென்னையில் அதிகரிக்க தொடங்கி உள்ளது
இந்நிலையில் சென்னையில் ஒரே தெருவில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் அசோக் நகர் 19வது தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவருக்கு கொரானா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது அடுத்தடுத்து மேலும் சிலருக்கு தொற்று உறுதியானது.
இதை அடுத்து அந்த தெருவில் 83 பேருக்கு மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. அதில் அந்த தெருவில் மட்டும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது, இதனால் அந்த தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. நுழைவாயிலில் தடுப்பு வேலிகள் அமைத்து உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. அந்த பகுதி முழுவதும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.