ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்தார் நளினி!
27 Dec,2021
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர் நளினி. இவரை பரோலில் விடக்கோரி அவரது தாய் பத்மா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவானது விசாரணைக்கு வந்த போது அரசு வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ஏற்கனவே நளினி உள்பட 7 பேர் விடுதலை செய்வது தொடர்பான முடிவு பரிசீலனையில் உள்ளது. தற்போது மனுதாரர் பத்மாவின் மனுவை அரசு பரிசீலித்து நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியுள்ளது என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து நளினிக்கு பரோல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நளினிக்கு இன்று (27 ஆம் திகதி) முதல் 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில் வேலூர் பெண்கள் சிறையில் இருந்து பரோலில் நளினி வெளியே வந்தார். வெளியே வந்த நளினி காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர், காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்குகிறார்.