17-வது சுனாமி நினைவு தினம் நாகை மாவட்டம் வேளாங்கன்னியில் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-
வாழ்க்கை முழுவதுமே எங்களுக்கு போராட்டமாக இருந்தால் நாங்கள் வாழ்வது எப்போது? மீனவர் பிரச்னை குறித்து மத்திய அரசு கவலைப்படுவதே இல்லை. உயிரிழப்பது, சிறை தண்டனை அனுபவிப்பது, படகை பறிகொடுப்பது, வலையை பறிகொடுப்பது எல்லாம் தமிழருக்கு நடக்கின்றன. இதனால் மத்திய அரசு கவலைப்படுவதில்லை. மத்திய அரசுக்கு தமிழரின் வரி வேண்டும், வாக்கு வேண்டும், வளங்கள் வேண்டும். ஆனால் தமிழர்கள் உயிர் பறிக்கப்படுவதை மத்திய அரசு பொருட்படுத்துவது கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு கடலுக்குள் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலை உருவாகி இந்தியா உள்பட 14 நாடுகளை பாதித்தது. அன்றைய தினம் தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களை சுனாமி தாக்கியது. இதில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு 17 ஆம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன. பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் எனப் பலரும் கடலுக்குள் பாலை ஊற்றியும், பூக்களைத் தூவியும் அஞ்சலி செலுத்துகின்றனர்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 விடுதலைசெய்யும்வரை போராட்டம் தொடரும் எனவும் ஜனவரி 1ல் ரயில் மறியல் நடத்த உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 68 கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்ததிய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரியும் படகுகளை மீட்கக்கோரியும் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், புதுக்கோட்டை, உள்ளிட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகதலைவர்கள் பலரும் குரல்கொடுத்தும் ஒருவாரம் ஆகியும் இன்னமும் மீனவர்கள் விடுக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படாத நிலை மேலும் தொடர்வதால், அனைத்து மீனவர்களின் சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து அனைத்து மீனவர்கள் சங்கங்கள் ராமேஸ்வரத்தில் தெரிவித்ததாவது:
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்கள் விடுதலை செய்யக்கோரியும் 10 படகுகளை மீட்கக் கோரியும் நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தமிழக அரசு சார்பில் தமிழக அரசின் பிரதிநிதிகள் குழு டெல்லியில் அதிகாரிகளை சந்தித்து மீனவர்களை விடுவிக்கக்கோரிக்கை வைக்க உள்ளநிலையில் அதன் பிறகு மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அறிந்த பின்னரே போராட்டம் கைவிடப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும். வருகின்ற 1ஆம் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தவும் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.