பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு -தமிழக அரசு உத்தரவு
24 Dec,2021
சென்னை: பேரறிவாளனின் (A. G. Perarivalan) பரோல் நாளையுடன் முடிவடையும் நிலையில் மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் 8வது முறையாக பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை கைதியாக உள்ள பேரறிவாளன் நீரிழிவு (Diabetes) மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்குத் கொரோனா (Coronavirus) தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளததாக கூறப்பட்டது. பேரறிவாளன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டும் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் 2021 மே 18 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் (M.K.Stalin) கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, மே 28 ஆம் தேதி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பேரறிவாளனுக்குத் தமிழக அரசு பரோலை நீட்டித்து வருகிறது. மேலும் பரோலில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் தொடர்ந்து கிருஷ்ணகிரி வேலூர் விழுப்புரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், பேரறிவாளனின் பரோல் (Perarivalan Parole) நாளையுடன் முடிவடையும் நிலையில், 8வது முறையாக மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது முதலில் ஒரு மாத பரோலில் வந்த பேரறிவாளனுக்கு அடுத்தடுத்து 7 முறை பரோல் நீட்டிக்கப்பட்டு 210 நாட்கள் முடிவுற்ற நிலையில், இன்று மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது.
அதேபோல, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள தம்மை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி நாகேஸ்வர் ராவ், பிஆர் கவாய், பிவி நாக ரத்னா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடமுடியாது என்று கூறிய நீதிபதிகள், ஆளுநர் விரைந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும். இதில் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல என்று கருத்து தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் இந்த விவகாரத்தில் ஏன் காலதாமதம் ஏற்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் அவகாசம் கோரினார். இதனையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை ஜனவரி மாதத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.